உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கர்நாடகம் திறந்து விட்ட காவிரி நீர் இன்று தமிழக எல்லையான பிலிகுண்டுலு வந்தடைந்தது.
காவிரி நதிநீர் தொடர்பான தமிழக அரசின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்தின் சம்பா சாகுபடிக்கு தேவையான தண்ணீரை திறந்துவிடும்படி உத்தரவிட்டது. திங்கட்கிழமை பிறப்பித்த இந்த உத்தரவில், தமிழகத்திற்கு உடனடி நிவாரணமாக வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் (12.96 டி.எம்.சி.) திறந்து விடும்படி தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடகத்தில் விவசாய சங்கங்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், தீர்ப்பை ஏற்று கர்நாடக அரசு தண்ணீரை திறக்க முடிவு செய்தது. அதன்படி நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.
இந்த தண்ணீர் இன்று காலை தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது. அப்போது, தண்ணீரின் அளவு குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இன்று இரவுக்குள் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட உள்ளது.