பண்டிகைக்காலத்தை முன்னிட்டு கொழும்பு மற்றும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களில் பொதுமக்கள் பெருமளவில் காணப்படும் பிரதேசங்களில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தினை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை பண்டிகைக்காலத்தை முன்னிட்டு கொழும்பு நகருக்கு வருகைதருவோருக்கு பொலிஸார் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.
கொழும்பு, புறக்கோட்டை, மகரகம ,நுகேகொட ,வெள்ளவத்தை ஆகிய பகுதிகளில் பொருட்களை கொள்வனவு செய்யும் பொழுது திருடர்கள் தொடர்பில் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளதுடன் தமது பாதுகாப்பு தொடர்பில் மக்கள் கூடுதலான கவனம் செலுத்துமாறும் பொலிஸார் பொதுமக்களை வேண்டிக்கொண்டுள்ளனர்.
பொதுவாக இவ்வாறான பண்டிகை காலப்பகுதியில் திருடர்கள் சன நெருக்கடியான இடங்களில் நடமாடுவதை காணக்கூடியதாக இருப்பதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். தமது பொதிகள் , பணம் மற்றும் சிறுபிள்ளைகள் அணிந்திருக்கும் தங்க ஆபரணங்கள் தொடர்பிலும் கூடுதல் கவனம் செலுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
வாகனங்களில் வருவோர் வாகனங்களை தரிப்பிடங்களில் நிறுத்துவது தொடர்பிலும் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். பொருட்களை கொள்வனவு செய்ய செல்லும் போது தாம் வந்த வாகனத்தை கவனிப்பதற்கும் ஒருவரை நிறுத்தி செல்வது பொருத்தமானது என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது