ஜப்பானின் சுய பாதுகாப்பு படையின் நடவடிக்கைகளை தெற்காசிய நாடுகள் உட்பட ஏனைய நாடுகளின் படைத்தரப்பினருடன் விரிவுபடுத்த ஜப்பான் பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் முதற்கட்டத்துக்காக இலங்கையின் உதவிகள் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்கமைய, ஜப்பான் பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளுடன் ஆலோசனைகளை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல்சார் பாதுகாப்பு செயற்பாடுகள் இதில் உள்ளடங்குவதாக தகவல்களை மேற்கோள்காட்டி தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் சுய பாதுகாப்பு படையின் உயர் அதிகாரியும், கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரியுமான அட்மிரல் கட்சுடோஸி கவானோ கடந்த மார்ச் 8 முதல் 9 ஆம் திகதிகளில் இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இதன்போது ஜப்பானின் திறன் மேம்பாட்டு உதவித் திட்டம் தொடர்பில் இலங்கை பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தனவுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் பாதுகாப்பு அமைச்சு கடந்த 2012 இல் ஆரம்பித்த இந்த திறன் மேம்பாட்டு உதவித் திட்டம் 14 நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.