இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனிக்கு உலகக்கோப்பை வென்ற அதே தினத்தில் பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் பல்வேறு விளையாட்டுகள் விளையாடப்பட்டு வருகின்றன். இருப்பினும் கிரிக்கெட்டுக்கு கிடைக்கும் வரவேற்பு மற்ற எந்த விளையாட்டுக்கும் கிடைப்பது இல்லை என்பது தான் உண்மை. அதிலும் டோனி களத்தில் இறங்கினால் இந்தியர்களின் உற்சாகம் பல மடங்கு அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
டோனியின் கூலான கேப்டன்ஷிப், ஆக்ரோஷமான பேட்டிங், நோ்த்தியான தலைமை பண்பு மற்றும் விக்கெட் கீப்பர் உக்திகள் இவை அனைத்தும் இளைஞா்களை மிகவும் ஈா்த்த விஷயமாக கருதப்படுகிறது. இந்தியாவில் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் டோனி தலைமையிலான இந்திய அணி 28 ஆண்டுகளுக்கு பின் கோப்பையை வென்று சாதனை படைத்தது. மேலும் அந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் டோனி அடித்த கடைசி சிக்சரை யாராலும் மறக்க முடியாது.
இந்நிலையில், இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரா் டோனியின் சாதனைகளை பாராட்டும் வகையில் அவருக்கு நேற்று பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. ராணுவ சீருடையில் பத்ம பூஷண் விருதை ஜனாதிபதியிடம் இருந்து பெற்றுக்கொண்டார். அவா் சிக்சா் அடிக்க பயன்படுத்திய பேட் உலக அரங்கில் அதிக விலைக்கு ஏலம் விடப்பட்ட பேட்டாக சாதனை படைத்துள்ளது. அது இந்திய மதிப்பில் சுமார் 91 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.
இதில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இந்திய அணி உலகக்கோப்பை வென்ற ஏழு ஆண்டுகளுக்கு பிறகு நேற்று அதே தினத்தில் (ஏப்ரல் 2-ம் தேதி) டோனிக்கு பத்ம விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.