மொராக்கோவில் இருந்து ஸ்பெயின் சென்ற படகு கடலில் கவிழ்ந்து 4 பேர் பலி

32310 0

மொராக்கோவில் இருந்து ஸ்பெயின் செல்ல முயன்ற போது கடல் சீற்றம் காரணமாக படகிற்குள் தண்ணீர் புகத் தொடங்கிய சிறிது நேரத்தில் கடலில் மூழ்கியது. இதில் 4 பேர் உயிர் இழந்தனர்.

ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து அகதிகளாக வெளியேறுவோர் ஐரோப்பிய நாடுகளுக்கு கள்ளத்தனமாக படகுகளில் பயணம் மேற்கொள்வது அடிக்கடி நடக்கிறது. இந்த நிலையில் மொராக்கோ நாட்டின் டாங்கியர்ஸ் என்னும் இடத்தில் இருந்து 12 பேர் ரகசியமாக ஒரு படகில் ஸ்பெயின் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டனர்.

அந்த படகு ஜிப்ரால்டர் ஜலசந்தி பகுதியில் நேற்று சென்றபோது கடல் சீற்றம் காரணமாக படகிற்குள் தண்ணீர் புகத் தொடங்கியது. இதனால் தள்ளாடிய அந்த படகு சிறிது நேரத்தில் கடலில் மூழ்கியது. இதில் படகில் இருந்த 4 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்தனர். மற்றவர்கள் படகை பிடித்துக் கொண்டு உயிருக்கு போராடினர்.

அப்போது அந்த வழியாக கடலில் ரோந்து வந்த ஸ்பெயின் கடலோர பாதுகாப்பு படையினர் நடுக்கடலில் தத்தளித்த 8 பேரையும் பாதுகாப்பாக மீட்டனர். கடலில் மிதந்து கொண்டிருந்த 4 பேரின் பிணங்களும் மீட்கப்பட்டன.

இந்த ஆண்டில் இதுவரை ஸ்பெயின் நாட்டுக்கு திருட்டுத்தனமாக படகு மூலம் பயணம் மேற்கொண்ட அகதிகளில் 125 பேர் ஜிப்ரால்டர் ஜலசந்தி பகுதியில் படகு கவிழ்ந்து பலியாகிவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment