தமிழகத்தில் கோடை காலத்தில் மின்வெட்டு இருக்காது!

381 0

கோடை காலத்தில் தமிழகத்தில் மின் வெட்டு இருக்காது என தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே வி.முசிறி கிராமத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின் தொடரமைப்புக் கழகம் சார்பில் புதிய துணை மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.8.21 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த துணை மின் நிலையத்தின் சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

 

மாநிலத்தில் மின் தேவைக்கு ஏற்ப புதியதாக துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் 132 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்க அறிவிக்கப்பட்டு, இதுவரை 10 புதிய மின் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் தேவைப்படும் இடங்களில் அவற்றை அமைக்க மத்திய அரசு நிதி அளிக்கவுள்ளது. விவசாயம், தொழில் உள்ளிட்ட துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 15,343 மெகா வாட் மின் நுகர்வு இருந்தது. இந்தாண்டு கடந்த 29-ம் தேதி 15,430 மெகாவாட் மின் நுகர்வு காணப்பட்டது. கோடை காலத்தில் 16,000 மெகா வாட் வரை மின் நுகர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மின் தேவையைக் கருத்தில் கொண்டு மின் விநியோகம் அளிக்கப்படும். மேலும் கோடையில் காற்றாலை மின் உற்பத்தி குறைந்துவிடும்.

எனவே, அதற்கான மாற்று ஏற்பாடுகளை மின்வாரியம் மேற்கொண்டுள்ளது. இதனால் வரும் கோடை காலத்தில் தமிழகத்தில் மின் வெட்டு இருக்காது. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றும் அனைத்து ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் நிதி நிலைக்கு ஏற்ப இந்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும், என்றார்.

முன்னதாக துணை மின்நிலைய சோதனை ஓட்டத்தை அமைச்சர் தங்கமணி, சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சர் வெ.சரோஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம், மின் வாரிய ஈரோடு மண்டல தலைமைப் பொறியாளர் எம்.சந்திரசேகர், நாமக்கல் மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் சி.சந்தானம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.பி.பி.பாஸ்கர், பொன்.சரஸ்வதி, சி.சந்திரசேகரன் ஆகியோர் பங்கேற்றனர்.

Leave a comment