41 குழந்தைகள் உயிரை பறித்த வணிக வளாக தீ விபத்து – ரஷிய அதிபர் புதின் நேரில் ஆய்வு

245 0

சைபீரியாவில் 41 குழந்தைகள் உள்பட 64 உயிர்களை பறித்த தீ விபத்து நிகழ்ந்த வணிக வளாகத்தை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

ரஷியாவின் சைபீரியா மாகாணத்தில் உள்ளது கெம்ரோவோ நகரம். இங்குள்ள வின்ட்டர் செர்ரி மால் வணிக வளாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் பலர் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென அந்த மாலில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு குவிந்திருந்த மக்கள் அலறியடித்தபடி அங்குமிங்கும் ஓடினர். தகவலறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை நேற்று 64 ஆக அதிகரித்துள்ளதாக அவசரகால மேலாண்மைத்துறை மந்திரி விளாடிமிர் புச்கோவ் தெரிவித்துள்ளார். காயங்களுடன் கெரெமோவோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் பத்துக்கும் அதிகமானவர்களை சுகாதாரத்துறை மந்திரி வெரோனிக்கா ஸ்குவோர்ட்சோவா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பலியானவர்களில் 41 பேர் குழந்தைகள் என இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தீ விபத்து நிகழ்ந்த வணிக வளாகத்தை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.

வணிக வளாக நிர்வாகத்தினரின் மிக மோசமான குற்றவியல் சார்ந்த மெத்தனப்போக்கால் (criminal negligence) இந்த
கோர விபத்து நிகழ்ந்ததாக புதின் வருத்தம் தெரிவித்தார்.

இங்கு என்ன நடக்கிறது? யாரையும் துப்பாக்கி முனையில் மடக்கி கொல்லவில்லை. விஷவாயு கசிவு ஏதும் நடக்கவில்லை. மக்களும் குழந்தைகளும் பொழுது போக்கி, மகிழ்ச்சியாக இருப்பதற்காக இங்கு வந்தனர். ஆனால், எல்லைகளைப் பற்றி பேசும் நாம் இந்த கோர தீ விபத்தில் இவ்வளவு மக்களை இழந்துள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a comment