கல்வி உதவித்தொகை குறைப்பு- தலைமை செயலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள்

267 0

கல்வி உதவித்தொகை குறைக்கப்பட்டதை கண்டித்து தலைமை செயலகத்தை முற்றுகையிட முயற்சித்த மாணவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தலைமை செயலகம் முற்றுகை போராட்டம் இன்று நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக மாணவர்கள் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் திரண்டனர்.

கல்வி காவியமயமாக்குவதால் மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும், மதம் மாறிய தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இன கிறிஸ்தவர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள சட்ட திருத்தத்தை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது.

மாணவர் சங்க தலைவர் மாரியப்பன், செயலாளர் உச்சி மாகாளி ஆகியோர் தலைமையில் ஒன்று திரண்ட மாணவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினார்கள். பின்னர் கோட்டை நோக்கி முற்றுகையிடுவதற்காக புறப்பட்டு செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து மறித்தனர்.

போலீசார் வைத்திருந்த தடுப்பு வேலிகளை மீறி மாணவர்கள் முன்னேறி செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

முற்றுகையை தடுக்க முயற்சித்த போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலையின் நடுவே உட்கார்ந்து போலீசாரை கண்டித்து கோ‌ஷமிட்டனர்.

மறியலில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கைது செய்தனர். 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கைது செய்யப்பட்டு வேனில் கொண்டு செல்லப்பட்டனர்.

முன்னதாக மாணவர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், உயர்கல்வி படிக்க கூடிய மாணவர்களுக்கு வழங்கி வந்த கல்வி உதவித்தொகை குறைக்கப்பட்டுள்ளது.

இதனை மாநில அரசு குறைத்ததை விலக்கி கொள்ள வேண்டும். மதம் மாறிய தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றனர்.

Leave a comment