சென்னை அருகேயுள்ள திருவிடந்தையில் அடுத்த மாதம் நடைபெறும் ராணுவ தளவாட கண்காட்சி வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் இன்று மாரடைப்பால் உயிரிழந்தார்.
ராணுவ பலத்தில் முதன்மை இடத்தில் உள்ள நாடுகள் தங்களிடம் உள்ள நவீன ஆயுதங்களை காட்சிப்படுத்தும் ராணுவ தளவாட கண்காட்சி உலகின் பல்வேறு நகரங்களில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
அவ்வகையில், இந்திய ராணுவத்தின் ஆயுத வல்லமையை பறைசாற்றும் விதமாக சென்னை திருவான்மியூரில் இருந்து சுமார் 19 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திருவிடந்தையில் வரும் ஏப்ரல் மாதம் 11-ம் தேதியில் இருந்து 14-ம் தேதிவரை சர்வதேச ராணுவ தளவாட கண்காட்சி நடத்த இந்திய ராணுவம் தீர்மானித்தது.
இந்த கண்காட்சியில் பங்கேற்க அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், இஸ்ரேல், பிரான்ஸ், ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன.
சுமார் 20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட திடலில் நடைபெறும் இந்த கண்காட்சியில் பங்கேற்க நாள்தோறும் சுமார் 10 நாடுகளை சேர்ந்த ஆயுத தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது பெயர்களை பதிவு செய்து வருகின்றன.
இந்நிலையில், இந்த கண்காட்சி வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பையா என்பவருக்கு இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதில் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சரகத்தை சேர்ந்த இன்ஸ்பெக்டர் சுப்பையா பரிதாபமாக உயிரிழந்தார்.