கண்டி, திகன கலவரம் குறித்து ஞானசார தேரர் அளித்துள்ள விளக்கம்

474 0

அனுராதபுர சிறைச்சாலைக்குச் சென்று மஹசொன் அமித் வீரசிங்கவின் சுகதுக்கம் விசாரித்த பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரர் அமித் வீரசிங்க தலைமையிலான குழுவினரின் கைது குறித்தும் கண்டி கலவரம் தொடர்பிலும் கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்குத் தேரர் தெரிவித்துள்ள விளக்கம்…..

இதன் பிறகாவது இந்த நாட்டில் எழுந்து வரும் பயங்கரமான கலாசார ஆக்கிரமிப்பை நிறுத்துங்கள் என நாம் மிகவும் பொறுப்புடன் கூறுகின்றோம். சம்பிரதாய முஸ்லிம் மக்களை வஹாபிய சிந்தனைவாதிகள் ஆக்கிரமிக்கின்றனர். சம்பிரதாய கத்தோலிக்கர்கள் கிறிஸ்தவ அடிப்படைவாதிகளின் ஆக்கிரமிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த நாட்டிலுள்ள இந்து, பௌத்த மக்கள் வஹாப்வாதிகளினாலும், கிறிஸ்தவ அடிப்படைவாதிகளினாலும் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், இடத்துக்கிடம் பாரிய நம்பிக்கையீனம் மத பிரிவினர்களிடையே எழுந்து வருகின்றது.

துரதிஷ்டம் என்னவென்றால், இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான சரியான ஒரு வழிமுறை காணப்படாமையாகும். இதற்காக நாம் ஒரு இனம் என்ற அடிப்படையில் கவலைப்படுகின்றோம். எவ்வளவு காலம்தான் இவ்வாறு ஒருவருக்கொருவர் வெறுப்புணர்வுடன் பயணிப்பது? ஒருவருக்கொருவர் முகத்தைப் பார்க்காமல் இருந்து கொண்டு நாம் இந்தப் பயணத்தைச் செல்ல முடியாது.

சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் என பேதங்கள் இன்றிய ஒரு சூழலை இந்நாட்டில் உருவாக்கவும், இந்த அறிவீனமான அரசியல் முறைமையை ஒரு புறத்தில் போட்டுவிட்டு, நாடு என்ற ரீதியில் ஒன்றாக எழுந்து நிற்க்க் கூட்டிய ஒரு சூழலையே நாம் உருவாக்க வேண்டியுள்ளோம். அவ்வாறில்லாது போனால் பாரிய ஒரு மோதலில் அது வந்து முடியும்.

தெல்தெனிய மற்றும் கண்டி பிரதேசங்களில் ஏற்பட்ட மோதல்களுக்கு மஹசொன் படையணியின் அமித் வீரசிங்கவையோ அல்லது ஏனைய இளைஞர்களையோ அல்ல கைது செய்ய வேண்டும்.

இந்த நாட்டின் சுதந்திரத்தின் பின்னர் ஏற்பட்ட 70 வருட காலத்துக்குள் இந்த நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் வர்க்கவாதத்தை இல்லாதொழித்து நல்லிணக்கத்தை ஏற்படுத்த தவறியுள்ளனர்.

இனங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள மோதல், பதற்றம் என்பவற்றை மாத்திரமல்ல, இந்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்களை உயர்த்தவும் இந்நாட்டை ஆண்ட ஆட்சியாளர்கள் தவறியுள்ளனர்.

இதுபோன்ற பின்னணியில், நாட்டில் ஏற்படும் பெரும்பாலான பதற்ற நிலைமைகளின் போது இனரீதியில் ஒன்றிணையும் இளம் துடிப்புள்ள இளைஞர்கள், தமது இனத்துக்காக எதனையாவது செய்ய வேண்டும் என சிந்திக்கின்றனர்.

இவ்வாறானவர்கள் சில வேலைகளை செய்கிறார்கள். இது இறுதியில் பாரிய ஒரு குற்றச் செயலாக சட்டத்தின் முன் அகப்பட்டு சுருண்டு விடுகின்றனர். இதனால், அந்த இளைஞர்களின் பெற்றோர்களும் சம்பந்தப்பட்டவர்களும் துன்பத்தை அனுபவிக்கின்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

தெல்தெனிய மற்றும் கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவங்களின் போது பொலிஸார் கட்டுப்பாட்டை இழந்து செயற்பட்ட வித்த்தை நாம் கண்டோம். கண்டியிலும், தெல்தெனிய பிரதேசங்களிலும் இடம்பெற்ற எதிர்பாராத சம்பவங்களுக்கு நாட்டின் பிரதமர் நேரடியாக பொறுப்புக் கூற வேண்டும் என்பதை நாம் தெளிவாக கூறிக் கொள்கின்றோம். ஏனெனில், இச்சம்பவம் நிகழும்போது நாட்டின் சட்டம் ஒழுங்கு அமைச்சராக பிரதமரே இருந்தார்.

தெல்தெனிய முதல் திகன பலகொல்ல வரையிலான 17 கிலோ மீற்றர் தூரத்துக்குள்ள சொத்துக்களுக்கு சேதம் விளைவித்துவிட்டு, வெளியிலிருந்து வந்த குழுக்கள் தாக்குதலும் நடாத்தியுள்ளனர்.

இருப்பினும், எந்தவிதமான சம்பந்தமும் இல்லாத, எரிகின்ற தீயை அணைப்பதற்கு தலையிட்ட இளைஞர்கள் சிலரையே கைது செய்துள்ளனர். அவர்களை சிறையில் அடைத்துள்ளனர். வெட்கத்தை மறைக்க மிகவும் வெட்கமான ஒரு நடவடிக்கையை அரசாங்கம் செய்துகொண்டிருக்கின்றது. நாம் இந்நாட்டின் ஜனாதிபதியிடம் இந்த நடவடிக்கையை நிறுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம் எனவும் ஞானசார தேரர் கேட்டுள்ளதாக ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.

Leave a comment