யுத்த காலத்தில் இந்த நாட்டின் ஜனாதிபதிகள் பயன்படுத்திய அதிக விலை மதிப்புள்ள குண்டு துளைக்காத அதிசொகுசு மோட்டார் கார் மற்றும் ஜீப் ரக 8 வாகனங்களும்தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிடம் காணப்பட்ட “வெலின்” எனும் பெயருடைய கப்பல் ஒன்றும் இன்று (26) நீர்கொழும்புக்கு அருகிலுள்ள மேற்கு ஆழ்கடல் பகுதியில் மூழ்கடித்து அளித்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த அதிநவீன கருவிகள் அகற்றப்பட்டதன் பின்னரேயே இவை மூழ்கடிக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை உயர் அதிகாரியொருவர் அறிவித்துள்ளார்.
யுத்த காலத்தில் முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர். ஜயவர்தன, ஆர். பிரேமதாச, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பயன்படுத்திய வாகனங்களும், முன்னாள் பிரதி அமச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பயன்படுத்திய வாகனம் உட்பட மொத்தம் 25 வாகனங்கள் அழிக்கப்படவுள்ளன. இன்றைய தினம் இவற்றில் 8 வாகனங்கள் மாத்திரமே ஆரம்ப கட்டமாக அழிக்கப்பட்டதாகவும் கடற்படை உயர் அதிகாரி கூறியுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தினால் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்ட இந்த வாகனங்கள் இராணுவத்தினருக்குரிய பொருட்களை ஏற்றும் கப்பலில் ஏற்றப்பட்டு அந்த கப்பலில் ஆழ்கடலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு மூழ்கடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த குண்டு துளைக்காத வாகனங்களை ஏலத்தில் விட்டால், பாதால உலக குழுக்களிடம் அந்த வாகனம் சென்று, அதனைக் குற்றச் செயல்களுக்கு பயன்படுத்துவதனைத் தடுக்கும் முகமாகவே இவ்வாறு கடலில் மூழ்கடிக்கப்பட்டு அழிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.