கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்கள் தங்களின் அனைத்து காணிகளையும் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி, தொடர்ச்சியாக 7 நாட்களாக நேற்றுவரை இரவு பகலாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் தமது கவனயீர்ப்புப் போராட்டத்திற்குரிய தகுந்த பதிலை எவரும் வழங்க முன்வராத நிலையில், இன்றிலிருந்து உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள்,
தமது உடல்களையாவது தமது காணிக்குள் புதையுங்கள் எனவும் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.
https://youtu.be/cw4zPwlxdZA
அத்துடன், தாங்கள் எல்லோராலும் கைவிடப்பட்ட நிலையிலேயே இவ்வாறு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்ததாகவும் குறித்த மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்டிருந்த தமது காணிகளை மீள ஒப்படைக்குமாறு வலியுறுத்தி பரவிபாஞ்சான் பிரதேச மக்கள் கடந்த மாதம் பல நாட்களாக தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.
இதனையடுத்து கடந்த மாதம் 17 ஆம் திகதி அந்த பகுதிக்கு விஜயம் செய்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பநதன், பாதுகாப்பு செயலாளருடன் தொலைபேசியூடாக தொடர்புகொண்டதை அடுத்து, இரண்டு வாரங்களுக்குள் மக்களின் காணிகளை மீளப் பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதியளித்திருந்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் வாக்குறுதியளித்தவாறு காலக்கெடு நிறைவடைந்து பல நாட்கள் கடந்த நிலையில் பரவிபாஞ்சானில் சுமார் மூன்றரை ஏக்கர் காணி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பரவிபாஞ்சான் மக்கள் தங்களுடைய அனைத்து காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்று கோரி மீண்டும் தங்களுடைய கவனயீர்ப்பு போராட்டத்தை கடந்த ஏழு நாட்களாக இரவு, பகலாக கவனயீர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.
ஆனால் கடந்த ஏழு நாட்களில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் வருகைதந்து ஜனாபதியின் கவனத்திற்கு விடயம் கொண்டு செல்லப்படும் என வாக்குறுதியளித்திருந்தார். இதனைத் தவிர மாவட்டத்தில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளோ, அரசியல் தரப்புகளோ தங்களை எட்டியும் பார்க்கவில்லை என்றும், எனவே இன்று 8ஆவது நாளாக தாம் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டனர்.
தங்களுடைய காணிகள் தங்களுக்கு மீளவும் கிடைக்கும் வரை, தாங்கள் உண்ணாவிரத பேராட்டத்தை கைவிடமாட்டோம் என பரவிபாஞ்சானில் உண்ணாவிரத்தில் ஈடுபட்டுவரும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பதினைந்து பேருக்குச் சொந்தமான பத்து ஏக்கர் காணி விடுவிக்கப்பட வேண்டும் அத்துடன், எனவே அந்தக் காணிகளும் விடுவிக்கப்படும் வரை தாம் தொடர்ந்தும் இரவு பகலாக தமது உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
https://youtu.be/mRzkERVch58