புகையிரதங்களின் மீது கல்லெறிந்து பயணிகளின் வாழ்க்கையோடு விளையாடும் நபர்களுக்கு ஆகக் கூடிய தண்டனை வழங்கப்படவுள்ளதாக புகையிரத பொது முகாமையாளர் பீ.ஏ.டீ.ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
குறித்த கல்லெறித் தாக்குதல் மூலம் அண்மைக் காலங்களில் பயணி ஒருவர் பலியாகியுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதல் மேற்கொள்பவர்களை பொலிஸார் மற்றும் புகையிரத அதிகாரிகளால் மட்டும் அடையாளம் காண முடியாது, இவர்களை கைது செய்ய பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொழுதுபோக்கிற்காக புகையிரதங்கள் மீது கல்லெறிவோர் தொடர்பில் அண்மையில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பொதுமக்களை முறையிடுமாறும் இவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்வாறான மிகவும் மட்டமான காரியங்களில் ஈடுபட்ட சிலரை அண்மையில் கொள்ளுப்பிட்டி, நாரஹேன்பிட்டி பிரதேசங்களில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர் இவ்வாறு புகையிரதங்கள் மீது கல்லெறிவோருக்கு எதிராக ஆகக் கூடிய தண்டனைகள் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.