ஜனாதிபதியின் வருகையின்போது இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிக்கைக்கான மறுப்பு அறிக்கை
19.03.2018 அன்று யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரி தொழில் நுட்ப ஆய்வுகூட திறப்புவிழாவுக்கான -ஜனாதிபதியின் யாழ் வருகையின்போது போராட்டப் பிரதிநிதிகளோடு சந்திப்பு நிகழ்ந்தது என ஜனாதிபதியில் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் உண்மையில்லை. உண்மையில் என்ன நடந்தது? என்பதை தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.
கடந்த 2017 ஒக்ரோபர் மாதம் தமிழ்த்தின விழாவிற்கு யாழ் இந்துக்கல்லூரிக்கு ஜனாதிபதி வந்தபோது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பொதுஅமைப்புக்களால் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அங்கு கேட்கப்பட்ட விடயங்களுக்கு – தம்மை கொழும்பில் வந்து சந்திக்குமாறு கூறிச்சென்றிருந்தார். இந்த நிகழ்வின் பின்னர் நடந்த சந்திப்பின்போதும் அதனைத் தொடர்ந்தும் இதுவரையிலும் அது தெடர்பாக ஆக்கபூர்வமான பதிலெதுவும் கிடைக்கவில்லை.
இந்நிலையிலேயே கடந்த திங்கட்கிழமை (19.03.2018) ஜனாதிபதி அவர்கள் யாழ் புனித பத்திரிசியார் கல்லூரிக்கு வருகைதரவிருந்தார்.
தமது முன்னாள் கல்லூரி அதிபர் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் மற்றும் அருட்தந்தை ஜிம்பிறவுண் ஆகியோர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டநிலையில் – அருட்தந்தை பிரான்சிஸ் சரணைடைந்தபோது – பதில் பாதுகாப்பு பொறுப்பாளரான இருந்த – இன்றைய ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே அன்று பிரதான வீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு எதிர்பார்த்திருக்கவில்லை. அங்கு நின்ற பொலிஸ் உயர் அதிகாரிகளே ”ஜனாதிபதி உங்களைச் சந்திப்பார்” என்றும் அதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன என்றும் கூறினார். 03 பேரை அழைத்துச் செல்வதாகவும் கூறினர். அருட்தந்தை சக்திவேல் ஆகிய நான் உட்பட பத்திரிசியார் கல்லூரியின் பழைய மாணவன் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரதிநிதியாக தாய் ஒருவர் என மூவரை விழா நடைபெற்ற கல்லூரிக்கு பொலிசார் அழைத்துச் சென்றனர்.
முறையான பாதுகாப்பு சோதனைகளின் பின்னரே உள்ளே அழைத்துச் சென்றனர். எம் பக்கத்தில் ஆண் பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் நிறுத்தி வைத்திருந்தனர்.
ஜனாதிபதி அங்கு நிகழ்த்தவிருந்த உரைக்கு முன்னராக எமக்கு சந்திக்க சந்தர்ப்பம் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தோம். ஏனெனில் – இந்துக்கல்லூரியின் தமிழ் விழா நிகழ்வின்போது – ”பின்னர் வந்து சந்தியுங்கள்” எனக்கூறிவிட்டு ஏமாற்றியது போல் இம்முறையும் ஏமாற்றப்படக்கூடாது என்பதற்காக – எமது கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி தனது உரையிலேயே விடயங்களைத் தெரிவிக்க வேண்டும் என விரும்பினோம். இதனால் ”காலதாமதமாக சந்திப்பதாயின் அவருடனான சந்திப்பு எமக்கு வேண்டாம்” என்றும் தெரிவித்திருந்தோம். இவ்விடயத்தை ஜனாதிபதியின் பிரிவினருள் உள்ள ஒருவர் எழுத்துமூலக் குறிப்பின் மூலம் மேடையில் ஜனாதிபதியிடம் கொடுத்திருந்தார். அதற்குரிய பதில் உரியநேரத்தில் கிடைக்காத நிலையில் – இதனை வலியுறுத்த பலதடவை முற்பட்டபோதும் பாதுகாப்புப் பிரிவினரும் ஏனைய அதிகாரிகளும் விடாது எம்மை பலவந்தமாகத் தடுத்து வவைத்திருந்தனர் என்றே கூறவேண்டும்.
ஜனாதிபதி எம்மைச் சந்திப்பார் என்றே நாம் அழைத்துச் செல்லப்பட்டோம். சந்திப்பு என்பதன் முழுமையான அர்த்தம் – ஜனாதிபதி அவர்களுக்கும் -சந்திப்பிற்கான ஒழுங்குகள் செய்யும் அதிகாரிகளுக்கும் – ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினருக்கும் நன்கு தெரியும் என நமபுகின்றோம்.
அத்தகைய முழுமையான கலந்துரையாடல் – கருத்துப் பரிமாறலுடனான அர்த்தத்துடனான சந்திப்பு – ஜனாதிபதி அவர்களுக்கும் பொலிசாரால் அழைத்துச் செல்லப்பட்ட போராட்டப் பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்றதா? என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவினரிடமும் அதிகாரிகளிடமும் கேட்கவிரும்புகின்றோம்.
கல்லூரியில் விழா முடிந்து பாதுகாப்புப் பிரிவினர் புடைசூழ ஜனாதிபதி நடந்துவரும்போதே – அங்கு நின்ற அதிகாரிகளால் அழைக்கப்பட்டோம். ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவினர் அருட்தந்தையாகிய என்னையும் காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரதிநிதியான தாயையும் தடுத்துத் தள்ளினர். நாம் பின்னால் தள்ளப்பட்டோம். ஏமாற்றப்பட்ட – வேதனையான தாய் சத்தமிட்டுக் கதறி அழுதார்.
இந்நிலையில் அப் பாடசாலையின் பழைய மாணவனால் காணாமல் ஆக்கப்பட்ட பத்திரிசியார் கல்லூரியின் முன்னாள் அதிபர் பிரான்சிஸ் யோசப்பின் படத்தினை மட்டுமே – ஜனாதிபதியின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் இடையூறுகளுக்கு மத்தியில் கொடுக்க முடிந்தது.
இடையூறுகளுக்கு மத்தியில் ஜனாதிபதியிடம் முன்னாள் அதிபரின் படத்தைக் கொடுத்தபோது ஜனாதிபதியின் ஊடகப் பிரிவினரால் எடுக்கப்பட்ட புகைப்படத்தைக் காட்டியே சந்திப்பு நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு சந்திப்பு நடை பெற்றதாக பொய்ப் பிரச்சாரம் செய்கின்றது.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு கூறுவதில் கூறுவதில் எவ்வித உண்மையும் இல்லை. அவர்கள் வெளியிட்ட அந்தப் புகைப்படத்திலேயே பாதுகாப்புப் பிரிவு உத்தியோகத்தர் ஒருவர் கல்லூரியின் பழைய மாணவனை இழுக்க முயற்சிப்பது அப்பட்டமாகத் தெரிகின்றது.
எம்மை அழைத்து சுமூகமான சந்திப்பு நடைபெறாத நிலையில் – அவ்விடயம் வெளியில் கசிந்தவுடன் – ஜனாதிபதிக்கு தமிழ்மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அபகீர்த்தியைப் போக்கும் முகமாக – ஆர்ப்பாட்டக்காரர்களுடன் சந்திப்பு நடைபெற்றது என பொய்யான செய்தி வெளியிட்டுள்ளனர்.
இதன்மூலம் நாம் மூவரும் மட்டும் ஏமாற்றப்படவில்லை. ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் ஏமாற்றப்பட்டிருக்கின்றார்கள் என்பதற்கான இன்னுமொரு சாட்சியே இந்த சந்திப்பு விடயம் எனலாம்.
அருட்தந்தை மா.சக்திவேல்,
இணைப்பாளர்,
அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான தேசிய அமைப்பு