கிழக்கு மாகாணசபையினை கொச்சைப்படுத்தும் வகையில் சில மத்திய அமைச்சர்கள் செயற்படுகின்றனர் –கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர்

396 0

IMG_0086கிழக்கு மாகாணத்தின் அதிகாரங்களை கொச்சைப்படுத்தும் வகையில் சில மத்திய அமைச்சர்கள் செயற்பட்டுவருவதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.நஷீர் தெரிவித்தார்.மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட பட்டிருப்பில் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் நன்னடத்தை அலுவலகம் இன்று செவ்வாய்க்கிழமை காலை திறந்துவைக்கப்பட்டது.

நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் கிழக்கு மாகாண ஆணையாளர் திருமதி எஸ்.சதீஷ்னர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார, நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு அமைச்சர் ஏ.நஷீர் மற்றும் மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் பிரதம அதிதியாக கலந்துகொண்டனர்.

சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம்,மா.நடராஜா,ஞா.கிருஸ்ணபிள்ளை,இரா.துரைரெட்னம் ஆகியோர் கலந்துகொண்டதுடன் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் உதவி ஆணையாளர் திருமதி சரண்யா சுதர்சன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,

கிழக்கு மாகாண சிறுவர் பராமரிப்பு திணைக்களத்திற்கு மத்திய அரசாங்கத்தின் நிதியொதுக்கீடுகள் மிகவும் குறைந்தளவிலேயே ஒதுக்கப்படுகின்றன.இதன்காரணமாக சிறுவர் பராமரிப்பு நிலையங்களை அமைப்பது என்பது கேள்விக்குறியானதாகவே இருந்துவருகின்றது.கடந்த கால யுத்த சூழ்நிலையின்போது சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் இல்லாத நிலையிலேயே இயங்கிவந்தன.யுத்தத்தின் பின்னர் இன்று ஓரளவு கட்டிடங்கள் அமைக்கப்படும் நிலைமை உருவாகிவருகின்றது.

இந்த நாட்டில் மகிந்த ஆட்சியை அகற்றுவதற்கு சிறுபான்மை மக்கள் பாரிய தியாகங்களை செய்துள்ளனர்.நல்லாட்சி ஊடாக அனைத்தும் நல்லது நடக்கவேண்டும் என்பதற்காகவே ஆட்சியை மாற்றினோம்.இந்த நல்லாட்சியில் இருந்துகொண்டு மாகாணத்தில் உள்ள அதிகாரத்தினை பறித்தெடுப்பதற்கும் மாகாண ஆட்சியை கொச்சைப்படுத்தும் வகையிலும் மத்திய அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் செயற்பட்டுவருகின்றனர்.