அபகரிக்கப்பட்ட காணிகளுக்குப் பதிலாக மாற்றுக்காணிகளை வழங்குமாறு கவனயீர்ப்புப் போராட்டம்

356 0

download-45பேராறுத் திட்டத்திற்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு மாற்றுக் காணிகளைத் தாருங்கள் என இன்று சாஸ்திரிகூழாங்குளம், பண்டார பெரிய குளம் விவசாயிகள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பண்டார பெரிய குளத்தின் கீழ் செய்கை பண்ணப்பட்ட வயல் காணிகளுக்கு உறுதியளிக்கப்பட்டவாறு இதுவரை மாற்றுக் காணிகள் தரப்படவில்லை என தெரிவித்தே விவசாயிகள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா பிரதேச செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மாவட்டச் செயலகம் வரை ஊர்வலமாகச் சென்று மாவட்ட அரசாங்க அதிபருக்கு மனுவொன்றையும் அளித்துள்ளனர்.

ஆசிய அபிவிருத்தி வங்கியால், கடந்த 2007ஆம் ஆண்டு நகரத்துக்கான நீர்வழங்கல் திட்டத்தை முன்னெடுப்பதற்கு நீர்வழங்கல் அதிகாரசபையால் 65 குடும்பங்களுக்கு சொந்தமான 167 ஏக்கர் வயல் காணிகள் இந்தத் திட்டத்திற்காக சுவிகரிக்கப்பட்டது.

இத்தனை வருடங்கள் கடந்தும், இதுவரையும் 14 குடும்பங்களுக்குரிய 37 ஏக்கர் நிலப்பகுதி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது எனவும் ஏனையவர்களுக்கு சிறுதொகைப் பணம் வழங்கப்பட்டு உங்களுக்குரிய காணிகளை திருத்தி எடுங்கள் எனக் கூறப்பட்டதாக மக்கள் விசனம் கவலை தெரிவித்துள்ளனர்.