2010 ஆம் ஆண்டு சங்கானை பகுதியில் ஆலய குருக்களை துப்பாக்கியால் சுட்டுப்படுகொலை செய்த இராணுவப் புலனாய்வாளர்கள் என்று தெரிவிக்கப்பட்ட காசிநாதன் முகுந்தன் அல்லது சக்தி, பாலசுப்பிரமணியம் சிவரூபன் மற்றும் கோப்ரல் தர இராணுவச் சிப்பாயான பேதுறு குணசேன ஆகிய மூவருக்கும் மரணதண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இன்று (22) உத்தரவிட்டார்.
2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி சங்கானை, முருகமூர்த்தி வீதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளையர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்தி நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை கொள்ளையடித்துச் சென்றிருந்தனர். குறித்த துப்பாக்கிச் சூட்டில் சிவானந்த குருக்கள் நித்தியானந்த குருக்கள் கொல்லப்பட்டார். அவரது இரு மகன்களும் படுகாயமடைந்தனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், இராணுவப் புலனாய்வாளர்கள் என்று தெரிவிக்கப்பட்ட காசிநாதன் முகுந்தன் அல்லது சக்தி, பாலசுப்பிரமணியம் சிவரூபன் மற்றும் இராணுவச் சிப்பாயான பேதுறு குணசேன ஆகியோரை கைது செய்தனர்.
சம்பவம் தொடர்பில் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்ற சுருக்கமுறையற்ற விசாரணைகளின் பின்னர் வழக்கேடுகள் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் பாரப்படுத்தப்பட்டன.
வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தமை, துப்பாக்கியைப் பயன்படுத்தியமை, குருக்களைக் கொலை செய்தமை மற்றும் இருவரை படுகாயப்படுத்தியமை ஆகிய 4 குற்றச்சாட்டுகளை முன்வைத்து எதிரிகள் மூவருக்கும் எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் இடம்பெற்று வந்த நிலையில், வழக்குத்தொடுனர் தரப்பு மற்றும் எதிரிகள் தரப்பு தொகுப்புரைகள் கடந்த 20 ஆம் திகதி இடம்பெற்றதுடன் குறித்த வழக்கு இன்று (22) தீர்ப்புக்காக திகதியிடப்பட்டு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, ஒருவரை துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்தமை, இருவருக்கு படுகாயம் ஏற்படுத்தியமை, வீட்டினுள் அத்துமீறி நுழைந்தமை, துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டமை ஆகிய குற்றச்சாட்டுகள் உள்ளடங்கலாக, 5 குற்றச்சாட்டுகளுக்கு மூவருக்கும் மரணதண்டனை மற்றும் ஆயுள்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
மேலும், மூவரையும் 30 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்த உத்தரவிட்ட நீதிபதி, 2 இலட்சம் ரூபாய் நட்டஈடு வழங்குமாறும் உத்தரவிட்டார்.