அப்பா எப்ப வருவீங்க?! -காணொளி

439 0

தாயின் இறுதி நிகழ்வுக்கு அழைத்து செல்லப்பட்ட அரசியல் கைதியான ஆனந்த சுதாகரினின் சிறைச்சாலை வாகனத்தில் அவரது மகள் சங்கீதா ஏறியமை தொடர்பில் சிறப்பான பாடல் ஒன்று தற்பொழுது வெளியாகியுள்ளது.

அண்மையில் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் மனைவியின் இழப்பும் அவரது சிறைவாசத்தால் அநாதையாக்கப்பட்ட அவரது பிள்ளைகளது ஒளிப்படங்களும் சமூகவலைத்தளங்களூடாக வெளியாகி அனைவரின் மனதையும் நெகிழ வைத்தது.

ஈழ மக்களின் உணர்வின் தாக்கம் புலம்பெயர் தமிழர்களால் பிரான்ஸ் பரிஸில் இருந்து பாடல் வரிகளில் வெளியாகியுள்ளது.பெற்றோருக்காய் ஏங்கித் தவிக்கும் பல நூறு சிறுவர்களின் பிரதிநிதியாய் விஸ்வரூபம் கொண்டு நிற்கும் ஆனந்த சுதாகரனின் மகள் சங்கீதாவின் வலி இப்பாடல் வரிகளில் வெளியாகியுள்ளது.

ஈழத்துப்பித்தன் இணுவையூர் மயூரன் பாடல் வரிகளில், இணுவையூர் உமாசதீஸ் இசையிலும் வெளிவந்த இந்தப் பாடலை, இணுவையூர் உமா சதீஸ் மற்றும் சுப்பர் சிங்கர் புகழ் அரபி ஆகியோர் பாடியுள்ளனர்.

அத்துடன், உமாசதீஸ் காட்சியமைப்பு செய்த இந்த பாடல் பிரான்ஸ் பரிஸிலில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இந்தப் பாடல் வரிகள்,

அப்பா எப்ப வருவீங்கள்
ஆசை முத்தம் தருவீங்கள்
அம்மா போன பின்னால
ஆதரவா யார் எமக்கு
ஆயிரம் உறவு அருகிருந்தும்
அப்பா போல யார் எமக்கு
அண்ணனோட காத்திருக்கேன்
அப்பா எப்ப வருவீங்கள்?
சைக்கிளில பள்ளி செல்ல
சாமத்தில அணைச்சுத் தூங்க
தோளில் வைச்சு சாமிகாட்ட
துயரத்திலும் துணையிருக்க
கை பிடித்து கடை போக
அப்பா எப்ப வருவீங்கள்?
கருவினிலே கண்ட மகளே
கனவாக இருக்குதம்மா
அருகினில் வந்திருந்து
ஆசை முத்தம் தந்துவிட
மனசெல்லாம் தவிக்குதம்மா
காலமொன்று கூடிவரும்
கனவுகள் மெய்ப்படும்
அருகினில் வந்திருப்பேன்
ஆசைகள் கை கூடும்
அதுவரை பொறுத்திடம்மா
அன்பு மகளே… செல்லமகளே..

இந்தப் பாடல் வரிகளை எழுதிய இணுவையூர் மயூரன் அவர்கள் சிறுவயதில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக தந்தையை இழந்து புலம்பெயர் நாட்டில் வசித்து வந்துள்ளார்.இதேபோன்று பாடலுக்கு இசையமைத்து இந்தப் பாடலைப் பாடிய இணுவையூர் உமா சதீஸ் சிறுவயதில் யுத்தம் காரணமாக தனது தந்தையை இழந்துள்ளார்.

தந்தையை சிறுவயதில் இழந்த இவர்கள் தமது மனதில் ஏற்பட்ட வலிகளை பாடல் வரிகளில் பாடி அனைவரின் மனதை நெகிழ வைத்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

கடந்த 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு கடந்த வருடம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்த சுதாகரனின் மனைவி யோகராணி கடந்த 15 ஆம் திகதி சுகயீனம் காரணமாக மரணமடைந்திருந்தார்.

கிளிநொச்சி மருதநகர் கிராமத்தில் இடம்பெற்ற அவரின் இறுதி நிகழ்வுக்கு பொலிஸாரின் பலத்த பாதுகாப்புடன் ஆனந்த சுதாகர் அழைத்து செல்லப்பட்டு மூன்று மணித்தியாலயங்கள் மனைவியின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பின்னர், மீண்டும் பொலிஸாரினால் சிறைச்சாலை வாகனத்தில் ஏற்றப்பட்ட போது அவரது மகளும் தந்தையுடன் சிறைச்சாலை வாகனத்தில் ஏறிய சம்பவம் இடம்பெற்றது.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான ஆனந்த சுதாகருக்கு மகனும் மகளும் என இரு பிள்ளைகள் உள்ளனர்.மகன் தாயின் உடலுடன் மாயானம் நோக்கிய இறுதி ஊர்வலத்தில் சென்றுவிட மகள் தந்தையுடன் சிறைச்சாலை வாகனத்தில் ஏறிய சம்பவம் அனைவரது மனங்களையும்  கலங்கச் செய்துள்ளது.தந்தை 2008 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட பின்னர், தாயின் அரவணைப்பில் வாழ்ந்த இரண்டு பிள்ளைகளும் தந்தையை பிரிந்த நிலையில், தற்போது தாயையும் இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment