தமிழின உணர்வாளர் முனைவர் ம. நடராஜன் அவர்களின் இழப்பு தமிழ்மக்களுக்குப் பேரிழப்பாகும்

614 0


புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ச் செயற்பாட்டாளர்களுடனும் தமிழ் அமைப்புக்களுடனும் மிக நெருங்கிய தொடர்புகளை வைந்திருந்ததோடு ஈழத்தமிழர் மத்தியில் பெருமதிப்பைப் பெற்ற ஐயா ம. நடராஜன் அவர்களின் திடீர் மறைவு ஒட்டுமொத்த உலகத் தமிழர்களுக்கும் பேரிழப்பாகும். அன்னாரின் தமிழ்ப்பணியும் தமிழிற்கு அவர் ஆற்றிய தொண்டும் என்றென்றும் உலகத் தமிழர் மனதில் இருந்து அழியாது.

ஈழவிடுதலைப் போராட்டத்தின் போது ஈழத்தமிழருக்காகத் தமிழகத்தில் முனைப்புடன் குரல் கொடுத்தவர்களில் ஐயா நடராஜனும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவர்களில் ஒருவராவார். அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையால் ஏற்பாடு செய்யப்பட்ட பல கருத்தரங்குகளிலும் சந்திப்புக்களிலும் கலந்துகொண்டு தனது ஆதரவுக்கரத்தை நீட்டியவர். அத்துடன் புலம்பெயர் நாடுகளில் அனுஸ்டிக்கப்படும் பல மாவீரர் நாள் நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு சிறப்புரைகள் ஆற்றியுள்ளார். தனது இறுதி மூச்சை விடும்வரை ஒரு முனைப்பான தமிழின உணர்வாளராக வாழ்ந்து இறைவனடி எய்தியுள்ளார்.

புதிய பார்வை என்ற சிற்றிதழை உருவாக்கிய பெருமை அன்னாரையே சாரும். மிகச்சிறந்த எழுத்தாளரான ம. நடராஜன் அவர்கள் தஞ்சையில் இனப்படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழரின் நினைவாகவும் ஈகைப் பேரொளி முத்துக்குமாரன் நினைவாகவும் முள்ளிவாய்க்கால் முற்றம் என்ற பெயரில் ஒரு நினைவாலையத்தைத் தனது சொந்தச் செலவிலேயே அமைத்தார். திரு.ம.நடராஜன் அவர்கள் மறைந்தாலும் அவர் இட்டுச்சென்ற நற்பணிகள் இப் பூவுலகில் தமிழர்கள் வாழும்வரை அவர் பெயர் உச்சரித்து நிற்கும் என்பதில் ஐயமில்லை.

அன்னாரை இழந்து துயரில் வாடும் அரவரது மனைவி திருமதி சசிகலா நடராஜனுக்கும் அவரது குடும்பத்துக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகின்றோம்.

– அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-

Leave a comment