பாரிய புதையலைத் தேடி முள்ளிவாய்காலில் தங்க வேட்டை!!

267 0

முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைத்து வைத்ததாக நம்பப்படும் இடத்தில் தங்கம் தேடி தோண்டும் பணிகள் நேற்று மாலை (20) தொடக்கம் முன்னெடுக்கப்பட்டது.

இரவு வரை தொடர்ந்த தோண்டும் பணிகள் முடிவுறாத நிலையில் இன்னொரு நாள் ஒதுக்கப்பட்டுள்ளது.புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் விடுதலைப் புலிகளால் நிலத்தடி அகழியில் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் இடத்தில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனிஸ்குமார் முன்னிலையில் தோண்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

போர் நடைபெற்ற காலத்தில் குறித்த தனியார் காணியில் விடுதலைப் புலிகளின் முகாம் ஒன்று காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நிலத்தின் கீழ் பாரிய பதுக்கு குழி ஒன்று அமைத்து அதில் பெறுமதியான நகைகளை புதைத்து வைத்துள்ளதாக பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகலை தொடர்ந்து, புதுக்குடியிருப்பு பொலீஸார் நீதிமன்றில் குறித்த பகுதியினை தோண்டுவதற்கான அனுமதியினை கோரியிருந்தனர்.

இந்தநிலையில் குறித்த பகுதியில் புதுக்குடியிருப்பு பொலீஸார் நீதிபதி, அரச அதிகாரி படை அதிகாரி, தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் முன்னிலையில், இன்று பிற்பகல் தொடக்கம் இரவு வரை கனரக இயந்திரம் கொண்டு தோண்டப்பட்டது.

எனினும், நேரம் போதாத காரணத்தால் குறித்த தோண்டும் நடவடிக்கையினை எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்கள்.அதுவரையும் குறித்த பகுதிக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்க வேண்டுமென நீதிபதி பணித்துள்ளார்.

Leave a comment