சமகாலத்தில் இலங்கை சமூகங்களிடையே எழுந்துள்ள முரண்பாடான நிலைமை தொடர்பில் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் முன்னாள் தலைவரும், தென் பகுதி பிக்குகளுக்கான பிரதம தேரருமான கலாநிதி ஓமல்பே சோபித்த தேரர் பதிலளித்துள்ளார்.
சகல பிரச்சினைகளுக்குமான அடிப்படைக் காரணங்களை தேரர் சந்தேகமற தெளிவுபடுத்தியுள்ளதாக பத்திரிகையொன்று இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
“உண்மையில் இன்று இடம்பெறவேண்டிய முக்கிய விடயம் நாட்டின் சட்டத்தை சகலருக்கும் சமமாக நடைமுறைப்படுத்துவதாகும். ஒவ்வொரு இனத்துக்கும் இந்நாட்டில் சட்டங்கள் வேறுபடக் கூடாது. நாட்டு சட்டத்தின் முன்னால் முஸ்லிம்களுக்கு வரப்பிரசாதங்கள் அதிகமாக உள்ளன என்ற கருத்து சிங்கள மக்களிடையே ஆளமாக பதிந்துள்ளது.
நாட்டின் பொதுவான சட்டம் முஸ்லிம்களுக்கு நடைமுறைப்படுத்தப்படாமல் அவர்களுக்கென்று சரீஆ சட்டம் செயற்படுத்தப்படுகின்றது. திருமணச் சட்டங்களுக்கு தனியான வக்பு நீதிமன்றம் இருக்கின்றது. தனியான பாடசாலை கட்டமைப்பொன்று செயற்படுத்தப்படுகின்றது. அந்தப் பாடசாலைகளுக்கு முஸ்லிம்களுக்கு மட்டுமே செல்ல முடியும்.
இலங்கையில் சிங்கள, தமிழ் மக்களுக்கு அவ்வாறு விசேட பாடசாலை இல்லை. நாட்டின் தேசிய உடை தொடர்பில் சட்டங்கள் உள்ளன. இருப்பினும், முஸ்லிம்களுக்கு அது செல்லுபடியற்றதாக காணப்படுகின்றது. சிங்கள மாணவர் ஒருவருக்கு அரசினால் பாடசாலை சீருடை ஒன்றுக்கு 750 ரூபா மாத்திரமே வழங்கப்படுகின்றது.
ஆனால், முஸ்லிம் மாணவர் ஒருவருக்கு பாடசாலை சீருடைக்காக 1500 ரூபா வழங்கப்படுகின்றது. இந்த சட்ட நடைமுறையில் பாரிய வேறுபாடு தென்படுகிறதல்லவா?
இலங்கையிலுள்ள அனைவருக்கும் 18 வயதை அடைந்தால் மாத்திரமே திருமணம் முடிக்க முடியும் என சட்டம் உள்ளது. இருப்பினும், திருமணத்தில் கூட முஸ்லிம்களுக்கு இந்த சட்டம் செல்லுபடியாவதில்லை.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஹம்பாந்தோட்டயில் முக்கிய சம்பவமொன்று இடம்பெற்றது. 14 வயது பெண் பிள்ளையொருவர் திருமணம் முடித்துள்ளார். அந்த பெண் பிள்ளை முஸ்லிம் இளைஞன் ஒருவரை திருமணம் முடித்துள்ளார். குறித்த பெண் பிள்ளையும் இஸ்லாம் சமயத்துக்கு மாறியுள்ளார். இந்த பெண் வீட்டுக்குத் தெரியாமல் சென்றே திருமணம் செய்துள்ளார்.
இருப்பினும், தற்பொழுது எந்த முறைப்பாடும் இல்லை. வழக்குத் தொடரவும் இல்லை. இந்த பெண் பிள்ளை சிங்கள இளைஞன் ஒருவருடன் சென்றிருந்தால், குறித்த இளைஞன் சிறையில் இருப்பார். இந்த சம்பவத்தில் சட்டத்திலுள்ள விசேட மாற்றம் தெரிவதில்லையா?
முஸ்லிம்களின் வழக்குகள் சாதாரண நீதிமன்றத்துக்கு வருவதில்லை. முஸ்லிம்களின் நீதிமன்றத்தில் தலையிட உயர் நீதிமன்றத்துக்குக் கூட முடியாது. இதுபோன்ற சிறப்புரிமைகள் சிங்களவர்களுக்குக் கூட இல்லை. இதனால், சிங்கள மக்கள் இது தொடர்பில் எதிர்ப்பை வெளியிடுவது நியாயமானது.
நாட்டிலுள்ள சாதாரண நீதிமன்றங்களில் முஸ்லிம் பெண் ஒருவர் விசாரணைக்காக நிறுத்தப்படுவது அநீதியானது என முஸ்லிம்கள் கூறுகின்றனர். அவ்வாறு செய்யும் போது முஸ்லிம் பெண்களிடமுள்ள வெட்கம், பயம் இல்லாமல் போகிறதாம். அப்படியென்றால், சிங்கள, தமிழ் பெண்களின் வெட்கம், பயம் இல்லாமல் செல்வதில்லையா? இந்த சிறப்புரிமை எமது நாட்டிலுள்ள பிக்குகளுக்காவது இல்லை. வழக்குகளின் போது பிக்குகள் கூட பகிரங்கமாக விசாரிக்கப்படுகின்றனர்.
வெள்ளிக்கிழமை முஸ்லிம் பள்ளிவாயல்களின் முன்னால் தனியான சட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அன்றைய தினம் வாகன போக்குவரத்து ஒழுங்குகள் செல்லுபடியற்றதாகின்றன. அந்த இடத்தில் புதுமையான சுதந்திரமொன்றுதான் இருக்கின்றது. இந்த சிறப்பம்சம்தான் என்ன?
முஸ்லிம்கள் அதிகமாக வாழும் நகர்களில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களுக்கு தலைக்கவச சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றதா? அது செயற்படுத்தப்படுவதில்லை. இது தொடர்பில், பௌத்தர்களுக்கும், இந்துமதத்தினருக்கும், கிறிஸ்தவ மதத்தினருக்கும் ஏமாற்றம் இருக்கின்றது.
அப்படியானால், ஒரு தனியான மதப் பிரிவினர் வாழும் பிரதேசங்களுக்கு விசேட சிறப்புக்கள் இருக்க வேண்டியதில்லை. சட்டம் சகலருக்கும் சமமாக்கப்பட வேண்டும். ஹலால் ஊடாக முஸ்லிம் அல்லாத நுகர்வோருக்கும் வரி சுமத்தப்படுகின்றது. இதென்றால், நியாயமான நடவடிக்கை ஒன்று அல்ல.
இந்த சகல பிரச்சினைகள் தொடர்பிலும் முஸ்லிம் உட்பட சகல மதத் தலைவர்களும் திறந்த கலந்துரையாடலை நடாத்த வேண்டும். அவ்வாறு செய்யவில்லையாயின் சமூகங்களிடையே நீதி நிலைநாட்டப்படுவதில்லை. இந்த நிலைமை தொடர்ந்தும் இருக்குமாக இருந்தால், அழுத்தங்கள் எந்த தோற்றத்தில் வெளிப்படும் என்பது தெரியாது எனவும் தேரர் அழகான முறையில் சகோதர சமூகத்துக்கு விளக்கிக் கூறியுள்ளார்.
சமூக அநீதி எனும் போர்வையில் இனவாதத் தீ பரவுவதற்கான அத்தனை கருத்துக்களையும் சாதாரண மக்களிடம் திணிக்கப்படும் போது நாட்டில் இனவாதம் தீப்பிடிப்பது தவிர்க்க முடியாத ஒன்று என்பதை இது போன்ற கருத்துக்களை பார்க்கும் ஒவ்வொருவரின் மனதிலும் எழும் நியாயமான ஆதங்கமாகும்.