முகநூல் பயன்படுத்தும் நபர்களின் தகவல்கள் திருடப்படுவது குறித்து முகநூல் அதிபர் மார்க் ஜூக்கர்பெர்க் விளக்கம் அளிக்க வேண்டும் என்று இங்கிலாந்து எம்.பி.க்கள் குழு உத்தர விட்டது.
சமூக வலைத்தளமான ‘பேஸ்புக்’ எனப்படும் முகநூலை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கிடையே, முகநூல் தொடர்பாக இங்கிலாந்தில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
முகநூல் பயன்படுத்தும் சுமார் 5 கோடி பேரைப் பற்றிய விவரங்கள் ஒரு ‘ஆப்’ மூலம் திருடப்பட்டு, கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற அரசியல் பிரசார நிறுவனத்திடம் பகிர்ந்து கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த விவரங்கள் அரசியல் பிரசாரத்துக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுபற்றி விசாரணை நடத்த இங்கிலாந்து எம்.பி. டாமியன் கொலின்ஸ் என்பவர் தலைமையில் எம்.பி.க்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு, முகநூல் அதிபர் மார்க் ஜூக்கர்பெர்க், 26-ந் தேதிக்குள் தங்கள் முன்பு நேரில் ஆஜராகி, இவ்விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று நேற்று உத்தர விட்டது.