ரஷிய அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள விளாடிமிர் புதினுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் அதிபரான விளாடிமிர் புதினின் பதவிக்காலம் முடிய உள்ள நிலையில் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இந்த தேர்தலில் விளாடிமிர் புதின் உள்பட எட்டு பேர் போட்டியிட்டனர். விளாடிமிர் புதின் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார்.
இந்த தேர்தலில் 67 சதவீதம் மக்கள் தங்களது ஜனநாயக கடமையை பதிவு செய்தனர். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அதிபர் புதின் 76.67 சதவீதம் வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். இதையடுத்து, புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்ட புதினுக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ரஷிய அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள விளாடிமிர் புதினுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ரஷியாவின் புதிய அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள புதினுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தேன். விரைவில் அவரை சந்திக்க உள்ளேன் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெள்ளை மாளிகை கூறுகையில், இருதரப்பு உறவுகள் மற்றும் தேசப் பாதுகாப்புக்கு தேவையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என இரு நாட்டு தலைவர்களும் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.