திருவனந்தபுரம் அருகே ஆபரே‌ஷன் தாமதத்தால் ஆஸ்பத்திரியில் நோயாளி தீக்குளிப்பு

323 0

201609071006101901_Operation-delay-to-patient-self-immolation-in_SECVPFதிருவனந்தபுரம் அருகே ஆபரே‌ஷன் தாமதம் ஆனதால் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளி தீக்குளித்தார்.

திருவனந்தபுரம் அருகே உள்ள நெய்யாற்றின்கரையை சேர்ந்தவர் சுனில் (வயது 36). கூலி தொழிலாளியான இவருக்கு நீண்ட நாட்களாக வயிற்றுவலி இருந்து வந்தது. இதனால் அவர் நெய்யாற்றின்கரையில் உள்ள தாலுகா அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதற்காக சென்றார்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சுனிலின் வயிற்றில் கட்டி இருப்பதை கண்டுபிடித்தனர். இதனால் அவரிடம் ஆபரே‌ஷன் செய்து கட்டியை அகற்ற வேண்டும் என்று கூறினார்கள்.

அதற்கு சுனில் சம்மதித்ததால் அவர் ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு பரிசோதனைகளும் செய்யப்பட்டது. ஆபரே‌ஷன் செய்வதற்கும் டாக்டர்கள் நாள் குறித்தனர். ஆனால் டாக்டர்கள் பற்றாக்குறை காரணமாக சுனிலுக்கு நடக்கவேண்டிய ஆபரே‌ஷன் தள்ளிப்போய் கொண்டே இருந்தது.

இதனால் வயிற்றுவலியில் அவதிப்பட்ட சுனில் தனக்கு உடனடியாக ஆபரே‌ஷன் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு டாக்டர்களிடம் கேட்டுப்பார்த்தும் எந்த பலனும் இல்லை.

இந்த நிலையில் வயிற்று வலி அதிகமானதால் நேற்று ஆஸ்பத்திரியில் இருந்து யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் வெளியே சென்ற சுனில் அங்கு ஒரு பெட்ரோல் பங்கில் பெட்ரோல் வாங்கிக்கொண்டு ஆஸ்பத்திரி திரும்பினார். பிறகு ஆஸ்பத்திரிக்குள் வைத்து தன் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

மற்ற நோயாளிகள் என்ன நடக்கிறது என்பதை உணரும் முன்பு இந்த சம்பவம் நடந்ததால் அவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினார்கள். ஆஸ்பத்திரி ஊழியர்கள் விரைவாக செயல்பட்டு சுனிலின் உடலில் பற்றியிருந்த தீயை அணைத்து அவரை காப்பாற்றினார்கள்.

மேலும் அவரது தீ காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் நெய்யாற்றின்கரை போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது போலீசாரிடம் ஆபரே‌ஷன் தாமதமானதால் வேதனை தாங்கமுடியாமல் தீ குளித்ததாக சுனில் தெரிவித்தார்.

இதைதொடர்ந்து அவர் திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அவரது தீக்காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு விரைவில் ஆபரே‌ஷன் செய்யப்படும் என்று டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.