நாராயணசாமி போட்டியிடுவதற்காக ஜான்குமார் ராஜினாமா செய்கிறார்

311 0

201609071011057791_puducherry-by-election-Narayanaswamy-contest-john-kumar_SECVPFஇடைத்தேர்தலில் எம்.எல்.ஏ. பதவிக்கு நாராயணசாமி போட்டியிடுவதற்காக ஜான்குமார் ராஜினாமா செய்கிறார். இது தொடர்பாக மேலிட தலைவர்களை சந்திக்க இருவரும் நேற்று இரவு டெல்லிக்கு பயணம் மேற்கொண்டனர்.

புதுவை மாநில சட்டமன்ற தேர்தல் கடந்த மே மாதம் நடந்து முடிந்தது.சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியாகவும், என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. ஆகியவை தனித்தும் போட்டியிட்டன. இதில் காங்கிரஸ் கட்சி-15 தொகுதிகளையும், தி.மு.க.-2 தொகுதிகளையும் கைப்பற்றியது.

என்.ஆர்.காங்கிரஸ்-8 மற்றும் அ.தி.மு.க.-4, சுயேட்சை-1 தொகுதிகளை கைப்பற்றியது. தி.மு.க., ஆதரவுடன் காங்கிரஸ் புதுவை மாநிலத்தில் ஆட்சி அமைத்தது.முதல்-அமைச்சராக நாராயணசாமியை காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாத நாராயணசாமி முதல்-அமைச்சராக பதவி ஏற்றார்.

தேர்தலில் போட்டியிடாமல் முதல்-அமைச்சர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதித்துவ பதவியில் அமருபவர்கள் பதவி ஏற்ற 6 மாதங்களில் இடைதேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆக வேண்டும் என்பது விதிமுறை ஆகும்.

இந்த நிலையில் நாராயணசாமி முதல்-அமைச்சராக பதவி ஏற்று 3 மாதங்கள் முடிவடைந்து உள்ளது. இன்னும் 3 மாதத்திற்குள் அவர் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வேண்டும்.

அதற்காக நெல்லித்தோப்பு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் பதவி விலகுவார் என்றும் அங்கு நாராயணசாமி போட்டியிடுவார் என்றும் கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் காங்கிரஸ் மேலிடத்தில் இருந்து நாராயணசாமிக்கு அவசர அழைப்பு வந்தது.

இதனையடுத்து நாராயணசாமி நேற்று இரவு டெல்லி சென்றார். அவருடன் நெல்லித்தோப்பு தொகுதி எம்.எல்.ஏ. ஜான் குமாரும் உடன் சென்றுள்ளார். அவர்கள் இன்று (புதன்கிழமை) காலை காங்கிரஸ் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்கை சந்தித்து பேசுகிறார்கள்.

அப்போது ஜான்குமார் தன் தொகுதியை நாராயணசாமிக்கு விட்டு கொடுக்கும் வகையில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய இருப்பதை தெரிவிப்பார். அதோடு ஜான்குமார் கட்சி மேலிடத்திற்கு சில நிபந்தனைகளையும் முன் வைப்பார் என தெரிகிறது.

இதன் பிறகு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாவை இருவரும் சந்தித்து பேச இருப்பதாகவும் தெரிகிறது. தொடர்ந்து இன்று இரவு மீண்டும் அவர்கள் புதுவை திரும்புகின்றனர்.

புதுவை சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது. அநேகமாக அன்றைய தினம் ஜான்குமார் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் கடிதம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து நெல்லித்தோப்பு தொகுதியை காலியிடமாக சபாநாயகர் வைத்திலிங்கம் அறிவிப்பார். தொடர்ந்து அங்கு அக்டோபர் மாதம் இடைதேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும். இடைத்தேர்தலில் முதல்-அமைச்சர் நாராயணசாமி போட்டியிடுகிறார்.