சின்னமலை ரெயில் நிலையத்தில் மெட்ரோ ரெயில் தொடர் சோதனை

495 0

201609070827533310_Metro-train-station-in-test-series-Chinnamalai_SECVPFவிமானநிலையம்- சின்னமலை இடையே அடுத்த மாதம் ரெயில் சேவை தொடங்க இருக்கும் நிலையில் சின்னமலை ரெயில் நிலையத்தில் தொடர் சோதனை நேற்று நடந்தது.சென்னையில் 2 வழித்தடங்களில் (வண்ணாரப்பேட்டை- விமானநிலையம், சென்டிரல்- பரங்கிமலை) மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 29-ந்தேதி 2-வது வழித்தடத்தில் கோயம்பேடு-ஆலந்தூர் இடையே பறக்கும் பாதையில் மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது.
முதல் வழித்தடத்தில், விமான நிலையம்-சின்னமலை இடையே பறக்கும் பாதையில் மெட்ரோ ரெயில் இயக்குவதற்கான அனைத்து பணிகளும் நிறைவடைந்து உள்ளன.

இந்த பாதையில், விமான நிலையம், மீனம்பாக்கம், நங்கநல்லூர் ரோடு (ஓ.டி.ஏ.), ஆலந்தூர், கிண்டி, சின்னமலை ஆகிய ரெயில் நிலையங்கள் வருகின்றன. சுமார் 9 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த பாதையில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் சுதர்சன் நாயக் கடந்த ஜூலை மாதம் தன்னுடைய குழுவினருடன் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கி உள்ளார். தற்போது இந்தப்பாதையில் தீவிரமாக சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. அதேபோல் ஆலந்தூர்- பரங்கிமலை இடையேயும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-விமானநிலையம்- சின்னமலை மற்றும் ஆலந்தூர்- பரங்கிமலை இடையே அடுத்த (அக்டோபர்) மாதம் ரெயில் சேவையை தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக லக்னோவில் உள்ள ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரநிர்ணய குழுவும், பாதுகாப்பு ஆணையர் சுதர்சன் நாயக் ஆகியோர் விமானநிலையம்- சின்னமலை இடையே பயணிகள் ரெயில் இயக்குவதற்கான சான்றிதழை வழங்கி உள்ளனர்.

விமானநிலையம்- சின்னமலை ரெயில்பாதையில் அதிக பயணிகள் பயணம் செய்வார்கள் என்பதால் அதிக கவனத்துடன் இந்தப்பாதை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப்பாதையை ஆய்வு செய்த பாதுகாப்பு ஆணையர் பாதுகாப்பு கருதி ஒரு சில தவறுகளை சுட்டிகாட்டி உள்ளார். அதனை உடனடியாக மாற்றியமைக்கவும் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி அந்தப்பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது.

விமானநிலையம் – சின்னமலை இடையே மெட்ரோ ரெயிலை இயக்கி தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறோம். சிக்னல்களின் செயல்பாடு, தண்டவாளத்தின் உறுதி தன்மை, தகவல் தொடர்பு சாதனங்களின் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு வகைகளில் சோதனை நடந்து வருகிறது.

குறிப்பாக கத்திப்பாரா மேம்பாலத்திற்கு குறுக்கே உயர்தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘ஹேண்டி லிவர்’ உயர்பாலம், கிண்டி ரெயில் நிலையம் அருகே மின்சார ரெயில் பாதையை கடந்து செல்லும் இடத்தில், ராட்சத இரும்பு பாலமும் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த 2 பாலத்திலும் சுமார் 35 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் மெட்ரோ ரெயிலை இயக்கி சோதனை நடத்தி வருகிறோம். சோதனை வெற்றிகரமாக நடந்து வருகிறது.

அதேபோல் விமானநிலையம்- சின்னமலை இடையே உள்ள 6 ரெயில் நிலையப் பணிகளும் முற்றிலுமாக நிறைவடைந்துவிட்டன. மத்திய மாநில அரசுகளின் அறிவுரையை கேட்டு அக்டோபர் மாதம் ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது. சின்னமலை ரெயில் நிலையத்தில் இருந்து பறக்கும் பாதை கீழே இறங்கி சைதாப்பேட்டையில் சுரங்கத்திற்குள் செல்லும் வகையில் ரெயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப்பாதையில் தொடர்ந்து பணிகள் நடந்து வருகிறது.இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.