முஸ்லிம் மக்கள் வீணாக அச்சம் கொள்ள தேவையில்லை, பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் என்ற வகையில் போதிய பாதுகாப்பை வழங்கத் தயார் என்றும் எதிர்காலத்தில் இது போன்ற துரதிஷ்ட சம்பவங்கள் நடைபெற ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் பொது நிர்வாக, முகாமைத்துவ, சட்டமும் ஒழுங்கும் அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகளிடம் உத்தரவளித்தார்.
அடிப்படை இனவாத குழுக்களினால் திட்டமிட்ட அடிப்படையில் இந்தச் சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளதாகத் தெரிவித்த அவர், கண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்களுடன் தொடர்புடையோருக்கு எதிராகத் தராதரங்களுக்கு அப்பால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீ லங்காவின் ஏற்பாட்டில் அதன் தலைவர் என் எம் அமீன் தலைமையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா உட்பட முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் புதிதாகக் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட பொது நிர்வாக, சட்டமும் ஒழுங்கும் அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டாரவூக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று அண்மையில் கொழும்பில் இடம்பெற்றது.
கொழும்பு 7 ல் உள்ள பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில் :-
இந்தச் சம்பவம் தொடர்பில் சிலர் அரசின் பக்கம் விரல் நீட்டுகின்றனர் அதில் எவ்வித உண்மையும் கிடையாது அரசுக்கு இந்தச் சம்பவத்துடன் தொடர்புள்ளதாகக் கூறப்படும் கூற்றைத் தான் முற்றாக மறுப்பதாகத் தெரிவித்த அமைச்சர் மாறாக அரசியல் நோக்குடன் செயற்படுகின்ற சிலர் இதன் பின்னணியில் இருக்கின்றனர் அவை தொடர்பில் அறிக்கை கிடைக்கப் பெற்றதும் முழுமையான தகவல்களை வழங்குவோம் என்றார்.
அண்மையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் இதுவரை சுமார் 280 சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இவற்றின் மூலம் இந்தத் தாக்குதல் சம்பவத்தின் பின்னணியைப் புரிந்து கொள்ள முடியும் என்றார்.
அத்துடன் சில பகுதிகளில் பொலிஸாரின் செயற்பாடுகள் தொடர்பிலும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதுடன் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன அவை தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த அவர் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளச் சட்டமும் ஒழுங்கும் அமைச்சின் மேலதிக செயலாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளது என்றார்.
அத்துடன் மேற்படி சம்பவத்தின் போது முஸ்லிம் இளைஞர்களும் முஸ்லிம் சமூகத்தினரும் மிகவும் பொருமையூடன் செயற்பட்டதாக தனக்கு அதிகாரிகள் குறிப்பிட்டதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் அதற்கான பாராட்டுகளையும் தெரிவித்தார்.
மிகவும் சவாலான சந்தர்ப்பத்தில் இந்த அமைச்சு பொறுப்பை பொறுப்பேற்றுச் சரியான முறையில் வழிநாடத்த முன்வந்தமைக்காக முஸ்லிம் சமூகத்தின் சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதாக முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீ லங்காவின் தலைவர் என் எம் அமீன் தெரிவித்தார்.
இது போன்ற சம்பவம் முஸ்லிம் சமூகத்திற்கு மாத்திரமன்றி தாய் நாட்டிற்கு பாரிய அபகீர்த்தியை ஏற்படுத்துகின்றது. எனவே, எதிர்காலத்தில் சட்டமும் ஒழுங்கும் முறையாகப் பேணப்பட வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும் என்று முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர். அவசரக்கால நிலைமையை நீக்கப்பட்டாலும் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும் என்றும் இது போன்ற சம்பவங்களின் போது சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் என்ற அடிப்படையில் சமத்துவம் பேணி பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்ப வேண்டும், தொடர்ச்சியாக இது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருபவர்கள் கைது செய்யப்படும் அதேசமயம் அவர்களுக்கு எதிராக சட்டம் சரியான முறையில் நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்தனர்.
அமைச்சருடனான இந்தச் சந்திப்பில் பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஜே. ஜே. ரத்னசிறி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரச்சார செயலாளர் அஷ்ஷெய்க் பாஸில் பாரூக், இளைஞர் அமைப்பின் பொறுப்பாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூர் ஆமித், முஸ்லிம் கவுன்ஸிலின் உப தலைவர் ஹில்மி அஹமட், செயலாளர் அஸ்கர் கான், தேசிய சூரா கவுன்ஸின் பிரதிநிதி சட்டத்தரணி மாஸ் யூசுப், ஸ்ரீலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் செயலாளர் சட்டத்தரணி எஸ். பாரிஸ், தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி, அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளத்தின் தலைவர் பி. எம். பாரூக், ஓய்வு பெற்ற கேர்ணல் பௌசுர் ரஹ்மான், அல் முஸ்லிமாத் அமைப்பின் தலைவர் டாக்டர் மரீனா ரிபாய், அகில இலங்கை வை எம் எம் ஏ பேரவையின் முன்னாள் தலைவர் டீன், திகன மஸ்ஜிதுன் நூர் ஜீம்ஆப் பள்ளிவாசல் தலைவர் அஹமட் ஷிப்லி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயலாளர் ஸாதிக் ஷிஹான் ஆகியோர் கலந்து கொண்டனர்.