தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் பி.ராம மோகன ராவ் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சிறப்பு திட்ட செயலாக்கத் துறையின் முதன்மைச் செயலாளர் கே.சத்யகோபால், வருவாய் நிர்வாக கமிஷனராக மாற்றப்பட்டார். அரசு தரவு மையத்தின் கமிஷனர் சந்திரகாந்த் பி. காம்ளே, போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் விக்ரம் கபூர், தொழில்துறை முதன்மைச் செயலாளரானார். அரசு கருவூலம் மற்றும் கணக்கு இயக்குனர் சி.முனியநாதன், கைத்தறி மற்றும் ஜவுளி இயக்குனராக மாற்றப்பட்டார்.
சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை சிறப்புச் செயலாளர் பி.செந்தில்குமார், நிதித்துறை (செலவீனம்) செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டுக் கழகத்தின் முன்னாள் மேலாண்மை இயக்குனர் வி.அமுதவல்லி, சமூக நலன் இயக்குனராக மாற்றப்பட்டார்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவின் துணை இயக்குனர் டி.எஸ்.ஜவஹர் மாநில அரசுப் பணிக்கு திரும்பியதைத் தொடர்ந்து அரசுக் கருவூலம் மற்றும் கணக்கு இயக்குனராக மாற்றப்பட்டார்.
மத்திய வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் துறையின் முன்னாள் இயக்குனர் ஷுன்சோன்கம் ஜடக் சித்ரு, மாநில அரசுப் பணிகளுக்குத் திரும்பியதைத் தொடர்ந்து வேளாண்மை சந்தையியல் மற்றும் வேளாண்மைத் தொழில் கமிஷனராக நியமிக்கப்படுகிறார்.
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை முன்னாள் இணைச் செயலாளர் ஆர்.ஜெயா, மாநில அரசுப் பணிக்கு திரும்பியதைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சிறப்புச் செயலாளராக மாற்றப்பட்டார்.
பொது மற்றும் மறுவாழ்வுத் துறையின் முன்னாள் முதன்மைச் செயலாளர் ஜத்தீந்திர நாத் ஸ்வேன், சர்வே மற்றும் செட்டில்மெண்ட் கமிஷனரானார்.
தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவர் கே.ஸ்கந்தன், அண்ணா மேலாண்மை நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பொது இயக்குனரானார். நெல்லை ஒழுங்கு நடவடிக்கைகளின் முன்னாள் கமிஷனர் ஜி.லட்சுமி பிரியா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் இணைச் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
வருவாய் நிர்வாகத் துறையின் பேரிடர் மேலாண்மை இயக்குனர் ஆர்.லில்லி, விடுப்பில் இருந்து திரும்பியதைத் தொடர்ந்து உயர் கல்வித் துறை இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். எஸ்.திவ்யதர்ஷினி விடுமுறையில் இருந்து திரும்பியதைத் தொடர்ந்து உள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் முன்னாள் கமிஷனர் சி.என்.மகேஸ்வரன், வருவாய் நிர்வாக கமிஷனர் அலுவலகத்தின் சமூக பாதுகாப்பு திட்ட இயக்குனராக மாற்றப்பட்டார்.
கைத்தறி மற்றும் ஜவுளி முன்னாள் இயக்குனர் ஜி.லதா, வருவாய் நிர்வாக கமிஷனர் அலுவலகத்தின் பேரிடர் மேலாண்மை இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் துணைச் செயலாளர் சந்திரசேகர் சக்ஹமுரி, சேலம் பட்டுப்புழு வளர்ப்பு இயக்குனரானார்.
தொழில் நுட்பக் கல்வி இயக்குனர் எஸ்.மதுமதி, குடிமைப்பொருள் வினியோகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கமிஷனராக மாற்றப்பட்டார். குடிமைப்பொருள் வினியோகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கமிஷனர் எஸ்.கோபாலகிருஷ்ணன், அரசு தரவு மையத்தின் கமிஷனரானார்.
கூட்டுறவு சங்கங்கள் பதிவாளர் ஆர்.பழனிசாமி, சுரங்கம் மற்றும் கனிமத்துறை கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்ட முன்னாள் கலெக்டர் வி.தட்ஷிணாமூர்த்தி, வேளாண்மை இயக்குனராக மாற்றப்பட்டார்.
தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரிய மேலாண்மை இயக்குனர் சி.விஜயராஜ் குமார், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
சர்வே மற்றும் செட்டில்மெண்ட் கமிஷனர் ஆ.வாசுகி, தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குனரானார். மத்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் முன்னாள் மேம்பாட்டுக் கமிஷனர் கே.கோபால், தமிழ்நாடு குடிமைப் பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குனரானார்.
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் முன்னாள் முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டார்.
மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் முன்னாள் இணைச் செயலாளர் தீரஜ் குமார், மாநில அரசுப் பணிக்கு திரும்பியதைத் தொடர்ந்து தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியத்தின் மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
வேளாண்மை கமிஷனர் எம்.ராஜேந்திரன், சேலம் சாகோசெர்வ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனரானார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் முதன்மைச் செயலாளர் ராஜேந்திர குமார், எல்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார்.
சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் முதன்மைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.