காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடியலையும் மருதங்கேணி போராட்டம் – இன்று ஒரு வருடம் பூர்த்தி

339 0

காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்டுத்தரவ வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டம் இன்று (15.03.2018) ஒரு வருடத்தைப் பூர்த்தி செய்துள்ளது.

இந்த 365 நாட்களும் நடு வெய்யிலிலும் பனிக்குளிரிலும் தங்களை வருத்தி தங்கள் பிள்ளைகளுக்காகவும், கணவன்களுக்காகவும், மனைவிக்காகவும் என அந்த மக்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கதறல்களிற்கான நீதியின் கதவு இன்னமும் திறக்கப்படவேயில்லை. நல்லாட்சி வெறும் வேடிக்கை மட்டும் பார்க்கின்றது.

வன்னியில் இறுதி யுத்தத்தின்போது இராணுவத்திடம் நேரடியாகக் கையளிக்கப்பட்டவர்களும் முன்னரான காலப்பகுதியில் இராணுவத்தினாரால் வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புங்களின்போது இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டவர்களுமே இந்தக் காணாமல் ஆக்கப்பட்டவர்கள்.

தம்மிடம் ஒப்படைக்கப்பட்டவர்களையும் தம்மால் கைது செய்யப்பட்டவர்களையும் என்ன செய்தோம் எனச் சொல்லாது இராணுவம் வாய் மூடி நிற்கிறது. இவர்களைப் பாதுகாக்கின்ற அரசோ மக்களை நோக்கி “ காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கெனும் இருப்பதாக அறிந்தால் தங்களுக்கு தகவல் தரக் கோருகின்றது. மனித உரிமைகளைக் காக்கின்ற ஐக்கிய நாடுகளோ கடந்த 09 வருடங்களாக இலங்கை அரசாங்கத்துக்கு கால அவசாகசம் கொடுத்துக் கொடுத்தே அவர்களைக் காப்பாற்றி வருகின்றது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களில் ஆறு பேர் இந்த ஒருவருட கால போராட்டத்தின்போது தங்கள் உயிர்களை துறந்திருக்கின்றார்கள். இந்த அரசுகள் அனைத்து மக்களும் போராடியே இறந்துபோய்விடட்டும் என மௌனித்து இருக்கிறனவோ தெரியவில்லை.

Leave a comment