இழப்புகளை முறையாக ஆவணப்படுத்த முஸ்லிம் மீடியா போரம் நடவடிக்கை

272 0

கண்டி மாவட்டத்தில் இனவாதிகளின் தாக்குதலுக்கு இலக்கான முஸ்லிம் பிரதேசங்களை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களின் சமகால நிலைவரங்கள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய பணிகள் தொடர்பில் அறிந்து கொள்ளும் நோக்கில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயற்குழு உறுப்பினர்களும் ஊடகவியலாளர்களும் அடங்கிய குழுவினர் கடந்த 12ஆம் திகதி விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் மற்றும் முஸ்லிம் கவூன்சில் ஒப் ஸ்ரீலங்காவின் தலைவரான சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம்.அமீன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்த விஜயத்தின் போது கண்டி மாவட்டத்தில் பிரதானமாக பாதிக்கப்பட்ட திகன, பல்லேகல, கெங்கல்ல, மெனிக்ஹின்ன, அம்பதென்ன ஆகிய பகுதிகளை இக்குழுவினர் பார்வையிட்டனர்.

அத்துடன் திகன, கெங்கல்ல பிரதேசத்திற்குச் சென்று உயிரிழந்த மர்ஹூம் அப்துல் பாஸித்தின் குடும்பத்தினரைச் சந்தித்து உரையாடியதுடன் அப்பகுதியில் தாக்குதலுக்கிலக்கான பள்ளிவாசல், வீடுகள், வர்த்தக நிலையங்களையும் பார்வையிட்டனர்.

பின்னர் திகன பிரதேசத்திற்குட்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து முன்னெடுக்கும் வகையில் கும்புக்கந்துறை அக்பர் ஜும்ஆ பள்ளிவாசலில் அமைக்கப்பட்டுள்ள நிலையத்தின் நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது. இதன்போது அப் பிரதேசத்தின் நிலைவரங்கள், சமகாலத் தேவைகள் தொடர்பிலும் நிர்வாகிகள் எடுத்துரைத்தனர்.

மேலும் தாக்குதலுக்கிலக்கான திகன, ரஜவெல்ல மஸ்ஜிதுந் நூர் ஜும்ஆப் பள்ளிவாசலின் சேதங்களைப் பார்வையிட்டதுடன் அங்கு குண்டசாலை பிரதேச செயலாளர் திருமதி சமந்தி நாகஹாதென்னவின் தலைமையில் நடைபெற்ற நல்லிணக்க கூட்டத்திலும் இக் குழுவினர் பங்குபற்றினர்.

இதனைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் வெகுவாகப் பாதிக்கப்பட்ட மற்றுமொரு பிரதேசமான அம்பதென்னவுக்கு விஜயம் செய்து பாதிக்கப்பட்ட பள்ளிவாசல், வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களைப் பர்வையிட்டதுடன் பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தனர்.

இதன்போது மக்களின் கருத்துக்கள் தேவைகள் தொடர்பில் முஸ்லிம் அரசியல் தலைவர்களிடமும் ஏனைய உயரதிகாரிகளிடம் தாம் தெரியப்படுத்துவதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் உறுதியளித்தார்.

இதேவேளை மேற்படி சம்பவங்கள் தொடர்பான தகவல்களை முஸ்லிம் ஊடக நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் முழுமையாகத் திரட்டி பூரணமான ஆவணப்படுத்தல் ஒன்றை மேற்கொள்ளவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் தீர்மானித்துள்ளது.

மேற்படி விஜயத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயலாளர் ஸாதிக் ஷிஹான், தேசிய அமைப்பாளர் எம். இஸட். அஹ்மத் முனவ்வர்ரூபவ் உப செயலாளர் ஜாவித் முனவ்வர, செயற்குழு உறுப்பினரும் நலன்புரி இணைப்பாளருமான எம்.பி.எம்.பைறூஸ், சட்ட ஆலோசகர் சட்டத்தரணி ஏ. எம். வைஸ் ஆகியோரும் அங்கத்தவர்களான சித்தீக் ஹனீபா, அமீர் ஹுசைன், அஷ்ரப் ஏ சமத், அனஸ் அப்பாஸ் ஆகியோரும் பங்கேற்றனர்.

Leave a comment