தென்னிந்தியாவில் செயற்படும் நாம் தமிழர் கட்சி உறுப்பினர்களே மலேசியா, கோலாலம்பூர் விமானநிலையத்தில் சிறீலங்காத் தூதுவர்மீது தாக்குதல் நடாத்தியவர்கள் என சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக மலேசிய அரசாங்கம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்தத் தாக்குதலில் இந்தியர்களே சம்பந்தப்பட்டார்கள் எனத் தெரிவித்த அவர் இதில் இலங்கையர்கள் எவரும் சம்பந்தப்படவில்லையெனவும் தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிரணியினரின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன, சிறீலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷவுக்கு விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல் இருப்பதாகவும், அவரைப் பாதுகாக்க அரசாங்கம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையெனக் குற்றம்சாட்டியிருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும்போதே பிரதமர் ரணில்விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்ததுடன், முன்னாள் அதிபர் வெளிநாட்டுக்குச் செல்லும்போது அவர்களிடம் பாதுகாப்பு வழங்குமாறு கோரமுடியுமே தவிர இங்கிருந்து பாதுகாப்புக்கு எவரையும் அனுப்பமுடியாது எனத் தெரிவித்தார்.