போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற 45 நிமிட யுத்தத்திலே விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் வீரச்சாவடைந்தார் எனவும், அதற்கு முதல்நாள் நடந்த சண்டையிலேயே விடுதலைப்புலிகளின் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் வீரச்சாவடைந்தார் என ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார்.
அவர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்ததுடன், எனது தலைமையிலான 53ஆவது டிவிசன் படையினரே விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், கடற்புலிகளின் தளபதி சூசை, தளபதி பானு ஆகியோரை கொன்றது எனவும் தெரிவித்தார்.
2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி 9.30 மணிக்குத் தொடங்கி 45 நிமிடங்கள் வரை 4ஆவது விஜயபா படைப்பிரிவுடன் இடம்பெற்ற மோதலிலேயே விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் வீரச்சாவடைந்தார் எனவும் தெரிவித்துள்ளார்.
நந்திக்கடற்கரையில் மே மாதம் 18ஆம் திகதி விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் பொட்டம்மான் வீரச்சாவடைந்தார்.
அத்துடன், தலைவர் பிரபாகரனின் மூத்தமகன் சாள்ஸ் அன்ரனி 18ஆம் திகதி கெமுனுவோச் படைப்பிரிவுடனான சண்டையில் கொல்லப்பட்டார் எனவும், அவரது இளையமகன் பாலச்சந்திரனுக்கு என்ன நடந்ததென்பது தெரியாது எனவும் தெரிவித்தார்.
மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தலைமையிலான 53ஆவது டிவிசனிடம் சரணடைந்த நிலையிலேயே பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டார் என்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.