ரூ.10 ஆயிரத்தை தொலைத்து தேர்வெழுத வழியின்றி தவித்த மாணவி

256 0

சொகுசு பஸ்சில் ரூ.10 ஆயிரத்தை தொலைத்து தேர்வெழுத வழியின்றி தவித்த மாணவிக்கு வாழப்பாடி போலீசார் மற்றும் பயணிகள் உதவினர்.

கோவையை சேர்ந்தவர் மாணவி பிரியதர்ஷினி. சென்னை தனியார் கல்லூரி ஒன்றில் முதுநிலை வணிக மேலாண்மை பட்டம் படித்து வருகிறார். இரு தினத்திற்கு முன் சொந்த ஊருக்கு சென்றிருந்த அவர், கல்லூரிக்கு கட்டணம் செலுத்துவதற்காக ரூ.16 ஆயிரம் பணத்தை பெற்றோரிடம் வாங்கி கைப்பையில் வைத்து கொண்டு, கோவையில் இருந்து சென்னைக்கு தனியார் சொகுசு பஸ்சில் பயணம் செய்தார்.

வாழப்பாடியை அடுத்த மேட்டுப்பட்டியிலுள்ள சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி அருகே நள்ளிரவு நேரத்தில் பஸ் சென்ற போது, மாணவி கைப்பையில் வைத்திருந்த ரூ.16 ஆயிரத்தில் ரூ.10,000 மட்டும் காணவில்லை. பணத்தை தொலைத்த மாணவி பதறியதால் அப்பகுதியிலேயே பஸ் நிறுத்தப்பட்டது.

இது குறித்து தகவலறிந்த வாழப்பாடி காவல் ஆய்வாளர் உமாசங்கர் தலைமையிலான போலீ சார் சம்பவ இடத்திற்கு சென்று, மாணவி மற்றும் பயணிகளிடம் விசாரணை நடத்தினர். ஆனால் பணம் மாயமானது எங்கே? எப்போது? என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

அந்த மாணவி மறுநாள் காலை கல்லூரியில் ரூ.16 ஆயிரம் பணத்தை கட்டினால் தான் தேர்வெழுத முடியும் என தெரிவித்ததால், போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாசங்கர் மற்றும் பயணிகள் சேர்த்து அந்த மாணவி தொலைத்த ரூ.10 ஆயிரத்தை வழங்கினர். அதன் பிறகு அதே பேருந்தில் அந்த மாணவி சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

போலீசார் மற்றும் பயணிகள் உதவியால் தொலைத்த பணத்தை திரும்ப பெற்று கல்லூரியில் செலுத்தி தேர்வெழுதிய மாணவி, வாழப்பாடி காவல் ஆய்வாளர் உமா சங்கரை போனில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

போலீசாரை பற்றி அதிகளவில் தவறான தகவல்கள் சமூக வலை தளங்களில் பரவிவரும் நிலையில், பஸ்சில் பணத்தை தொலைத்த மாணவிக்கு உதவியது குறித்த தகவல், அந்த சம்பவங்களுக்கு மருந்தாக அமைந்துள்ளது குறிப்பிடதக்கதாகும்.

Leave a comment