காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஒன்று திரண்டால் ஜல்லிக்கட்டு போராட்டம் போல வெற்றி பெறலாம்- அன்புமணி

438 0

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பிரச்சினையில் விவசாயிகள் ஒன்று திரண்டால் ஜல்லிக்கட்டு போராட்டம் போல வெற்றி பெறலாம் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில் அனைத்து விவசாயிகளும் கலந்து கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த கலந்தாய்வு கூட்டம் ஈரோட்டில் இன்று நடந்தது.

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:-

காவிரி பிரச்சினை என்பது விவசாயிகளின் பிரச்சினை மட்டுமல்ல. தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதார பிரச்சினை ஆகும். காவிரி நீர் மூலம் 19 மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சினை தீர்கிறது.

மேலும் 5 கோடி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது. 50 லட்சம் விவசாய நிலம் பயனடைகிறது. இந்த காவிரி நீர் பிரச்சினை 145 ஆண்டுகளாக நடந்து வரும் பிரச்சினையாகும்.

1892-ம் ஆண்டு முதல் ஒப்பந்தம் போடப்பட்டது. இதில் தமிழ்நாட்டுக்கு 575 டி.எம்.சி. தண்ணீர் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. பின்னர் 1972-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தில் 489 டி.எம்.சி. ஆக குறைந்தது. 2007-ம் ஆண்டு 419 ஆக குறைந்தது.

சமீபத்தில் அது கோர்ட்டு தீர்ப்பு படி 404 டி.எம்.சி. ஆகியுள்ளது. இவ்வாறாக கடந்த 92 ஆண்டுகளில் மட்டும் 170 டி.எம்.சி. தண்ணீரை இழந்துள்ளோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு அக்கறையுடன் செயல்பட வில்லை. தற்போது கர்நாடகாவில் தேர்தல் நடைபெற உள்ளதால் அதை மனதில் வைத்து மத்திய அரசு செயல்படுகிறது.

சமீபத்தில் முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. அந்த கூட்ட தீர்மானத்தின்படி முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி தலைவர்களும் பிரதமர் மோடியை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்த நேரம் கேட்கப்பட்டது.

ஆனால் பிரதமர் நீர்வளத்துறை மந்திரியை சந்திக்க கூறி விட்டார். நேற்று கூட 4 மாநில அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் டெல்லியில் நடந்தது. அதில் பேசிய நீர்வள செயலாளர் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து கோர்ட்டு தெளிவாக கருத்து கூறவில்லை என்கிறார்.

விவசாய சங்கத்தினர் அனைவரும் ஒன்று திரண்டு வாருங்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வெற்றி பெற்றதுபோல் இதிலும் நாம் வெற்றி பெறலாம். அரசியலுக்கு அப்பாற்பட்டு இதில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பிரச்சினையில் நான் எனது பதவியில் இருந்து விலகவும் தயாராக உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி, மாநில துணை பொதுச்செயலாளர்கள் போ.வை.ஆறுமுகம், வேலுசாமி, மாநில துணை செயலாளர் வடிவேல், ஒருங்கிணைப்பாளர் வெங்கடாச்சலம், மத்திய மாநகர மாவட்ட செயலாளர் கிருபாகரன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில தலைவர் அய்யாகண்ணு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a comment