அமெரிக்க தொலைகாட்சிக்கு பேட்டியளித்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக அரசியல் சாசனத்தை மாற்ற மாட்டேன் என திட்டவட்டமாக தெரிவித்தார்.
கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெறும் சீனாவில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் மற்றும் துணை அதிபர் பதவிக்கான தேர்தல்கள் நடைபெறுகின்றன. ஒருமுறை இந்த பதவியை வகித்தவர்கள் தொடர்ந்து இரண்டாவது முறையாக தேர்தலில் போட்டியிடலாம்.
ஆனால், பத்தாண்டுகள் வரை ஆட்சி செய்து இரண்டாவது பதவிக் காலத்தை நிறைவு செய்தவர்கள் அடுத்து மூன்றாவது முறையாக தேர்தல்களில் போட்டியிட கூடாது என அந்நாட்டின் அரசியலமைப்பு சட்டம் தெளிவுப்படுத்துகிறது.
சீனாவின் அதிபராக தற்போது பதவி வகித்துவரும் ஜி ஜின்பிங் கடந்த 2013-ம் ஆண்டு சீனாவின் ஆளும்கட்சி தலைவராகவும், அந்நாட்டின் அதிபராகவும், முப்படைகளின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், சீனாவின் அதிபர் இரு முறைக்கு மேல் பதவியில் நீடிக்கக் கூடாது என்னும் அரசியலமைப்பு சட்டத்தில் சமீபத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன்படி ஒருவர் எத்தனை முறைவேண்டுமானலும் அதிபராக தேர்வு செய்யப்படலாம்.
இந்நிலையில், சீனாவின் அண்டை நாடான ரஷ்யாவின் அதிபராக உள்ள விளாடிமிர் புதின் ஏற்கனவே மூன்று முறை அந்நாட்டின் அதிபராக தேர்வுசெய்யப்பட்டுள்ள நிலையில், வருகிற மார்ச் 18-ம் தேதி நடைபெறும் அதிபர் தேர்தலில் நான்காவது முறையாக போட்டியிட உள்ளார். இந்த தேர்தலிலும் அவரே வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளது. சீனாவை போல் ரஷ்யாவிலும் ஒருவர் தொடர்ந்து இரண்டு முறைக்கு மேல் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட முடியாது.
இதையடுத்து பிரபல அமெரிக்க தொலைகாட்சி நிறுவனம் ஒன்று புதினிடம் பேட்டி எடுத்தது. அப்போது, சீனாவை போன்று ரஷ்யாவிலும் அரசியல் சாசன சட்டம் மாற்றியமைக்கபடுமா என்ற கேள்விக்கு புதின் பதிலளித்தார். அவர் அளித்த பதிலில், அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக அரசியல் சாசனத்தை மாற்ற மாட்டேன். இதுவரை அப்படிப்பட்ட திட்டம் எனக்கு இல்லை, என கூறினார்.