7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்த பெற்றோரை சேர்த்து வைத்த நீதிபதிகளுக்கு 10 வயது சிறுவன் உருக்கமான நன்றி!

270 0

7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்த தனது பெற்றோரை சேர்த்து வைத்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கு, 10 வயது சிறுவன் உருக்கமாக நன்றி தெரிவித்தான்.

குடும்பநல கோர்ட்டுகளில் தீர்க்க முடியாமல் சுப்ரீம் கோர்ட்டு வரை வந்த 23 வழக்குகள் 7 ஆண்டுகளாக நிலுவையில் இருந்தன.

இந்த வழக்குகளுக்கு தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்ட சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் குரியன் ஜோசப், மோகன் எம்.சந்தான கவுடர் ஆகியோர், வழக்குகளில் தொடர்புடைய கணவன்-மனைவியை அழைத்துப் பேசி அறிவுரை வழங்கி வழக்குகளை தீர்த்து வைத்தனர்.

அப்படி, விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்து இருந்த ஒரு தம்பதியை நீதிபதிகள் அழைத்துப் பேசி சேர்ந்து வாழுமாறு அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள். 7 ஆண்டுகளாக பிரிந்து இருந்த அவர்கள், நீதிபதிகளின் அறிவுரையை ஏற்று மீண்டும் சேர்ந்து வாழ சம்மதம் தெரிவித்தனர். அப்போது அந்த தம்பதியின் 10 வயது மகனும் கோர்ட்டுக்கு வந்து இருந்தான்.

நீதிபதிகள் தனது பெற்றோரை சேர்த்து வைத்ததை அறிந்ததும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்த அவன், அவசர அவசரமாக தனது கைப்பட ஆங்கிலத்தில் எழுதிய நன்றிக் கடிதம் ஒன்றை எடுத்துச் சென்று நீதிபதிகளிடம் கொடுத்தான். தனது பெற்றோரை சேர்த்து வைத்ததற்காக நன்றியும் கூறினான்.

தனது நன்றிக் கடிதத்தில் சிறுவன் கீழ்க்கண்டவாறு கூறி இருந்தான்.

கடவுள் எப்போதும் உனக்கு ஏதாவது கொடுத்து இருப்பார்.

ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வுக்கான ஒரு சாவி உண்டு.

ஒவ்வொரு நிழலுக்கும் ஒரு வெளிச்சம் இருக்கும்.

ஒவ்வொரு கவலைக்கும் ஒரு விடிவுகாலம் உண்டு.

விடியும் ஒவ்வொரு பொழுதுக்கும் ஒரு திட்டமிடல் நமக்காக இருக்கும்.

இப்படிக்கு,

தங்கள் கீழ்ப்படிதலுள்ள விபு.

இவ்வாறு அந்த கடிதத்தில் உருக்கமாக எழுதப்பட்டு இருந்தது.

கடிதத்தை படித்துப்பார்த்தும் நெகிழ்ந்து போன நீதிபதிகள், சிறுவனை தட்டிக் கொடுத்து பாராட்டினார்கள்.

அப்போது நீதிபதி குரியன் ஜோசப் கூறுகையில், “தனது பெற்றோரை சேர்த்து வைத்ததற்காக மிகுந்த மகிழ்ச்சி அடைந்து, அதற்காக நன்றி தெரிவித்து இந்த 10 வயது சிறுவன் தனது கைப்பட எழுதிக் கொடுத்த கடிதத்தை, இந்த கோர்ட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய வெகுமதியாக கருதுகிறேன்” என்றார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், “இந்த சிறுவனின் பெற்றோருக்கு 1997-ம் ஆண்டு மே மாதம் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். பின்னர் மனக்கசப்பின் காரணமாக 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள். விவாகரத்து கோரி குடும்பநல கோர்ட்டுக்கு சென்ற அவர்கள் அங்கு பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாமல், பின்னர் மேல்கோர்ட்டில் ஒருவர் மீது ஒருவர் சிவில், கிரிமினல் வழக்குகளை தொடர்ந்தனர். அங்கும் தீர்வு காணமுடியாமல் இறுதியில் சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்து பிரச்சினைக்கு தீர்வு கண்டுள்ளனர்” என்றார்.

Leave a comment