அமெரிக்காவில் முன்னாள் படை வீரர்கள் இல்லத்தில் 4 பேர் பலி!

355 0

அமெரிக்காவில் நாபே வேலியில் ஓய்வு பெற்ற படை வீரர்களுக்காக நடத்தப்படுகிற இல்லத்தில் 4 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தின் நாபே வேலியில் ஓய்வு பெற்ற படை வீரர்களுக்காக நடத்தப்படுகிற இல்லம் ஒன்று உள்ளது. அமெரிக்காவில் ஓய்வுபெற்ற படை வீரர்களுக்காக நடத்தப்படுகிற மிகப்பெரிய இல்லம் இதுதான். இந்த இல்லத்தில், முன்னாள் படை வீரர்கள் சுமார் 1,000 பேர் தங்கி உள்ளனர். இந்த நிலையில், அங்கு நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு ஒருவர் துப்பாக்கியுடன் சென்றார். அங்கு அவர் 3 பெண்களை பிணைக்கைதிகளாக பிடித்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து, பெண்களை பிணைக்கைதிகளாக பிடித்த நபருடன் பேச்சு வார்த்தை நடத்த முயற்சித்தனர்.

ஆனால் அதில் பலன் இல்லை. அதைத் தொடர்ந்து அந்த குறிப்பிட்ட அறைக்குள் போலீசார் அதிரடியாக நுழைந்தபோது, அங்கு பிணைக்கைதியாக பிடிக்கப்பட்டிருந்த 3 பெண்களும், அவர்களை பிடித்து வைத்திருந்த நபரும் இறந்து கிடந்தனர். பலியான பெண்கள் அந்த இல்லத்தின் பணியாளர்கள் என தெரிய வந்து உள்ளது. சம்பவம் நடந்தது எப்படி என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை. இருப்பினும், துப்பாக்கியுடன் சென்ற நபர், அந்தப் பெண்களை சுட்டுக்கொன்று விட்டு, தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும் என உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன. போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

Leave a comment