அரசாங்கம் என்ற வகையில் கடந்த இரண்டரை வருட காலமாக இந்த இனவாதத்தை ஒழிப்பதற்கு எடுத்த செயற்பாடுதான் என்னவென ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
நாம் மனச்சாட்சிக்கு முரணில்லாமல் இங்கு மீட்டிப்பார்ப்போம். நாம் அரசாங்கம் என்ற வகையில் இந்த இனவாதத்தை நிறுத்த என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்.
கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது நான் ஜனாதிபதியிடம் தனிப்பட்ட முறையில் இதுபற்றிக் கூறினேன். சமூக வலைத்தளங்களிலும், ஒவ்வொரு இடங்களிலும் முஸ்லிம்களை இலக்கு வைத்து மோசமான பிரச்சாரம் முன்னெடுக்கப்படுவதாகவும் இதனைச் சட்டத்தினால் தடுத்து நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்தேன். பிரதமரிடம் கூறினேன். பொலிஸ் தலைமையகத்துக்குச் சென்று மூன்று நான்கு தடவைகள் தனிப்பட்ட ரீதியில் முறைப்பாடுகள் செய்துள்ளேன்.
இதனைத் தடுத்து நிறுத்துவதற்கு எந்தவொரு நடவடிக்கையையும் இந்த அரசாங்கம் முன்னெடுக்க வில்லை. அரசாங்கத்தில் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதையிட்டு நான் வெட்கப்படுகின்றேன்.
பொட்டு அம்மான் எங்கு இருந்தது என்பதை தேடிக் கொள்ள முடிந்தது. பிரபாகரன் எங்கு இருந்தது என்பதை கண்டுகொள்ள முடிந்தது. இப்படியான எமது புலனாய்வுத் துறைக்கு ஏன் இந்த இனவாத சூத்திரதாரிகள் யார் என்பதை மட்டும் உரிய நேரத்தில் கண்டறிந்து கொள்ள முடியாமல் போனது என்பது மட்டும் புதுமையாகவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.