கண்டி பல்லேகலயில் தீயில் எரிக்கப்பட்ட வீட்டிலிருந்து கிடைக்கப் பெற்ற இளைஞனின் சடலம் மனிதப் படுகொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்களை மேற்கொள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த வீட்டுக்கும் அதன் அருகிலிருந்த கடை ஒன்றுக்கும் தீ வைத்த குழு தொடர்பில் முக்கிய தகவல்கள் பல கிடைக்கப் பெற்றுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளதாக தேசிய சகோதர ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பிலான விசாரணைக்கு சீ.சீ.ரி.வி. காட்சிகளையும் பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
கடந்த 6 ஆம் திகதி காலை கண்டி பல்லேகல கென்கல்ல வீட்டில் இருந்து இந்த இளைஞனின் (26) சடலம் கிடைக்கப் பெற்றுள்ளது. கடந்த ஐந்தாம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவத்தின் போது குறித்த இளைஞன் இருந்த வீட்டுக்கு தீ வைத்துள்ளனர். இவரின் சகோதரர்கள் மற்றும் பெற்றோர்கள் உயிர் தப்பியுள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
குறித்த இளைஞன் புகையை சுவாசித்ததனாலேயே மரணமடைந்துள்ளதாக மரண பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இவர் புகையை சுவாசிப்பதற்கு வீடு தீப்பிடித்தமையே காரணம் எனவும் இதனால் இவரது மரணம் ஒரு கொலையாக கருதப்படுவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். இதன்படி, சந்தேகநபர்களுக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டின் கீழ் விசாரணை முன்னெடுக்கப்படும் எனவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளதாகவும் குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.