காணாமலாக்கப்பட்ட விவகாரத்தில் கடந்தகால காரணிகளை நிராகரித்து எதிர்காலத்தை நோக்கி பயணிக்க முடியாது. காணாமலாக்கப்பட்டமை குறித்த விவகாரத்தில் கடந்தகால சம்பவங்களை கருத்தில்கொள்ள முடியாது என்றால் குற்றவாளிகளை அரசாங்கம் அங்கீகரிக்கின்றது என்றே அர்த்தப்படுகின்றது. எனவே வலுக்கட்டாயமாக காணாமலாக்கப்படுவதிலிருந்து எல்லா ஆட்களையும் பாதுகாத்தல் பற்றிய சர்வதேச சமவாய சட்டமூலத்தை மீண்டும் அரசாங்கம் பரிசீலனை செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
இவ் அரசாங்கம் தீர்வுகள் குறித்து முன்வைத்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை வலுக்கட்டாயமாக காணாமலாக்கப்படுவதிலிருந்து எல்லா ஆட்களையும் பாதுகாத்தல் பற்றிய சர்வதேச சமவாய சட்டமூலம் மீதான விவாதத்தின் போதே அவர் இக் காரணிகளை குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
வலுக்கட்டாயமாக காணாமலாக்கப்படுதல் குறித்து இன்று நாம் ஆராயும் நிலையில் இது இலங்கையின் மிக நீண்டகால நெருக்கடியாக உள்ளது. கடந்த காலங்களில் குறிப்பாக ஜே.வி.பி.யின் கிளர்ச்சிக்காலத்தில் (1979-–1981) பொதுமக்கள் காணாமலாக்கப்பட்டனர். இக் காலத்தில் அப்போதைய எதிர்க்கட்சி உறுப்பினர் மஹிந்த ராஜபக் ஷ இந்த விவகாரம் குறித்து தொடர்ச்சியாக கேள்வி எழுப்பியதுடன் ஜெனிவா வரை சென்று இந் நிலைமைகளை எடுத்துரைத்துள்ளார்.
அதேபோல் கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடையும் காலகட்டம் வரையிலும்கூட நாடு முழுவதும் பேசப்பட்ட ஒரு விடயம் இந்த காணாமல்போனோர் விவகாரமாகும். குறிப்பாக வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் காணாமலாக்கப்பட்டமை பரவலாக பேசப்பட்ட ஒரு விடயமாகும். இவற்றின் அடிப்படையில் தான் இன்றுவரை தமிழ் மக்கள் தமது உறவுகளைத் தேடி போராடி வருகின்றனர். கடந்த காலத்திலிருந்து தமிழ் மக்கள் தமது உறவுகளுக்காக தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதில் முக்கியமானது இறுதி யுத்த காலகட்டத்தில் இராணுவத்திடம் சரணடைந்த பொதுமக்களே காணாமல் போயுள்ளனர். இது நியாயமற்ற விடயமாகும். இன்று அரசாங்கம் வலுக்கட்டாயமாக காணாமலாக்கப்படுதலிலிருந்து தடுக்கும் சட்டத்தை கொண்டுவரும் நிலைப்பாடுகள் குறித்து கலந்துரையாடி வருகின்றது. இச் சட்டம் கொண்டுவரப்படும் நிலையில் கடந்தகால நிலைமைகள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும்.
மேலும் இந் நாட்டின் சுயாதீனத்தில் சர்வதேசத்தின் தலையீடுகள் உள்ளதென்பதும் அவர்களின் அழுத்தம் மற்றும் நெருக்கடிகளை ஏற்றுக்கொள்ளக் கூடாதென்பதும் சர்வதேச தலையீட்டை ஏற்றுக்கொள்ள முடியாதென்பதும் ஒரு சிலரது நிலைப்பாடாக உள்ளது. இது நாட்டின் சுயாதீனத்தை அழிக்கும் என கூறுகின்றனர். எமக்கும் நாட்டின் சுயாதீனம் குறித்து அக்கறையுள்ளது. ஆனால் நாட்டின் சுயாதீனம் என கூறிக்கொண்டு சர்வதேச சட்டங்களை மீறியும் சர்வதேச தலையீடு இருக்கக்கூடாது என்பதற்கான தான்தோன்றித்தனமாக சட்டங்களை, நியாயங்களை உருவாக்கிக்கொண்டு ஆட்சிசெய்வதும் ஒருபோதும் சுயாதீனமாக அமையாது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். நாம் சர்வதேச சட்டதிட்டங்களையும் மதிக்க வேண்டும். அதேபோல் இறுதி யுத்தமொன்று இடம்பெற்றபோது ஆயுதம் ஏந்திய விடுதலைப்புலிகள் இலங்கை இராணுவத்தால் அழிக்கப்பட்டு யுத்தம் வெற்றிகொள்ளப்பட்டது. எனினும் இதில் பொதுமக்கள் தண்டிக்கப்பட்டமை, காணாமலாக்கப்பட்டமை ஏற்றுக்கொள்ளப்பட முடியாத விடயமாகும்.
இலங்கையில் புலிகளை அழித்து யுத்தத்தை வெற்றிகொண்ட நோக்கத்திற்காக இலங்கை இராணுவத்தையும் முன்னைய அரசாங்கத்தையும் சர்வதேசம் தண்டிக்கவுள்ளது எனவும் ஒருசிலர் கூறுகின்றனர். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இலங்கையில் உள்நாட்டு யுத்தம் ஒன்று இடம்பெற்ற நிலையில் விடுதலைப் புலிகளை எதிர்த்து சர்வதேச நாடுகள் அரசாங்கத்தை பலப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்தன. சர்வதேச தலையீடுகள் இந்த யுத்தத்தில் காணப்பட்டன. இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேசத்தின் முழுமையான ஒத்துழைப்பு அமைந்தது. பல நாடுகள் விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடைசெய்தன. பல நாடுகள் நிராகரித்தன. பல நாடுகளிலிருந்து புலனாய்வு தகவல்கள் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. முழுமையாக பயங்கரவாதத்தை ஒழிக்க சர்வதேச ஒத்துழைப்பு கிடைக்கப்பெற்றுள்ளது. இந்தியா போன்ற நாடுகள் இறுதி யுத்தத்தில் அதிக பங்களிப்பு செய்து இலங்கை அரசாங்கத்தை பலப்படுத்தியுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையும் கூட இலங்கையை ஆதரித்து செயற்பட்டுள்ளது. ஆகவே சர்வதேச நாடுகள் விடுதலைப்புலிகளை ஆதரித்தன என்பது உண்மைக்கு அப்பாற்பட்ட காரணியாகும்.
இவ் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் நாட்டில் தீர்வுகளை பெற்றுத்தருவோம், உண்மைகளை கண்டறிவோம் என கொடுத்த வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை. அரசியல் தீர்வு விடயத்தில் அரசாங்கத்தின் பயணம் உறுதியாக இல்லையென்பது தெரிகின்றது. இவ் அரசாங்கம் நாட்டு மக்களுக்கும் சர்வதேச நாடுகளுக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இந்த சட்டம் எதிர்காலத்தில் நடக்கும் செயற்பாடுகள் குறித்து மட்டுமே கவனம் செலுத்துமெனவும் கடந்தகால சம்பவங்கள் இதில் உள்ளடக்கப்படாது எனவும் வெளிவிவகார அமைச்சர் சபையில் தெரிவித்தார்.
ஏன் இவ்வாறான ஒரு தீர்மானத்தை அரசாங்கம் முன்னெடுக்கின்றது என தெரியவில்லை. ஏன் கடந்தகால சம்பவங்களை ஆராய முடியாது? இலங்கையில் பயங்கரவாதத்தை எதிர்த்து இலங்கை அரசாங்கம் யுத்தம் செய்தது. இதில் இலங்கை அரசாங்கம் பாதுகாப்பு தரப்பை பயன்படுத்தி அரசாங்கத்தின் கட்டளைக்கமைய இராணுவம் யுத்தத்தை முன்னெடுத்தது. இதில் ஆயுதப்படைகளுக்கும் ஆயுத தாரிகளுக்கும் யுத்தம் இடம்பெற்றதற்கு அப்பால் அப்பாவி மக்கள், ஆயுதம் ஏந்தாத போராளிகள் என அனைவரும் ஏன் தண்டிக்கப்பட்டனர்? பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். இவற்றை மறுக்கவே முடியாது. இவற்றுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தும் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்.
ஆனால் கடந்தகால சம்பவங்களை நிராகரித்து உண்மைகளை மறைப்பதென்பது குற்றவாளிகளுக்கு அரசாங்கம் அங்கீகாரம் கொடுக்கின்றது என்பதே அர்த்தமாகும். இதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. யுத்தத்தில் அப்பாவித்தமிழ் சிவில் மக்கள், ஆயுதம் ஏந்தாத போராளிகள் காணாமலாக்கப்பட்டமையை விடுதலைப்புலிகள் என்ற நிலைப்பாட்டில் இருந்து அவதானிக்க முடியாது. இரண்டும் வேறுபட்ட காரணிகளாகும். இதனை அரசாங்கம் விளங்கிக்கொள்ள வேண்டும். இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் நிலைநாட்டப்பட வேண்டும். குற்றவாளிகளுக்ெகதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆகவே இது எதிர்காலத்தில் மட்டுமல்ல, கடந்த கால குற்றங்களையும் கருத்தில் கொண்டு குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். பொறுப்புக்கூறல் விடயங்களை அரசாங்கம் தட்டிக்கழிக்க முடியாது. நெருக்கடிகளை அரசாங்கம் சார்ந்திருக்கக்கூடாதென்றால் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கவேண்டிய கடமையுள்ளது. ஆகவே அரசாங்கம் இன்று கொண்டுள்ள நிலைப்பாடு குறித்து மீண்டும் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை எடுக்கும் செயற்பாடுகளை கையாள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.