“என் தங்கைகள் படைநடத்தும் அழகில் நான் தலை நிமிர்ந்து கொள்வேன்.”

929 0

மகளிர் தினம் என்றது நினைவுக்கு வருவது ஒக்டோர் 10 ஆம் திகதியே. தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாற்றில் முதல் பெண் போராளி 2ஆம் லெப். மாலதி வித்தாகி வீழ்ந்த அன்றைய நாளே தமிழீழப் பெண்களின் எழுச்சிக்கு வித்தாக அமைந்தது . அதனால் ஒக்டோபர் 10ஆம் திகதி தமிழீழ பெண்கள் எழுச்சி நாளாகப்பட்டு தமிழீழ மகளிர் தினமாக பிரகடனப்பட்டது.

உலக மகளிர்தினம் உலகெங்கும் மார்ச் 8 ஆம் திகதி கொண்டாடப் படுகிறது. ரஷ்யாவில், பஞ்சாலைகளில் தொழிலாளர்கள் கொத்தடிமைகளைப் போல் வேலை வாங்கப்பட்டனர். ரஷ்யாவிற்கும் ஜெர்மனிக்கும் இடையில் யுத்தம் நடந்து வந்த காலம், ஒரு ரொட்டித் துண்டு கூட கிடைக்காமல், தொழிலாளர்களின் வாழ்க்கை அவலமாக இருந்தது. தானும் தங்களது குழந்தைகளும், மற்றவர்களும் பசியால் துடிப்பதை இனியும் பொறுக்க முடியாது என ரஷ்யத் தலைநகர் பெட்ரோ கிராடுநகரில், பஞ்சாலைப் பெண் தொழிலாளர்கள் கொதித்து எழுந்தனர்.

1917இல் மார்ச் 8 அன்று பெட்ரோ கிராடு நகரில் வைபோர்க் என்ற பகுதியில் பஞ்சாலையில் வேலை செய்த பெண்கள் வேலை நிறுத்தத்தைத் துவக்கினார்கள். வேலை நிறுத்தம் செய்த பெண் தொழிலாளர்கள் பேரணியாக வீதிக்கு வந்தனர்.

நமக்கு உணவு வேண்டும், போர் நிறுத்தப்பட வேண்டும், சுதந்திரம் வேண்டும், தெருவில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை. எங்களோடு சேர்ந்து போராடுங்கள் என ஆண் தொழிலாளர்களை பெண் தொழிலாளர்கள் அறைகூவி அழைத்தனர்.

பலர் குழந்தைகளுடன் வந்தனர். சிறுவர் சிறுமியரை நடத்திக் கூட்டி வந்தனர். ஒரு பகுதிபடை வீரர்களும் இப்பேரணியில் இணைந்தனர். பேரணியின் ஆவேசத்தைக் கண்டு, மாணவர்களும் அலுவலக ஊழியர்களும் கூட இணைந்தனர்.

இவ்வாறு பல சிற்றாறுகள் கலந்து பொங்கிப் பெருகும் பேராற்று வெள்ளம் போல், மனித வெள்ளம் முதன்மைச் சாலையை நிறைத்தது. கோரிக்கை முழக்கம் காற்றை நிறைத்தது, பதாகைகள் கண்களை நிறைத்தது.

. இப்பேரணியில் சுமார் ஒரு லட்சத்து இருபத்து எட்டாயிரம் பெண், ஆண் தொழிலாளர்கள் மற்றும் படைவீரர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்களும் மற்றவர்களும் கலந்து கொண்டனர்.

அடுத்த நாள் இந்தப் பேரணி இரண்டு லட்சத்தைத் தாண்டியது. புதிய கோரிக்கையும் சேர்ந்து கொண்டது. ” மன்னராட்சி ஒழிக” ஆம் புரட்சி தொடங்கி விட்டது. இவ்வாறு 1917 மார்ச் 8 அன்று ரஷ்யாவில் பெண்கள் தொடங்கிய பெரும் புரட்சிதான், உலக மகளிர் தினம் மார்ச் 8 அன்று மகளிர் தினம் கொண்டாடப்படுவதற்கு உண்மையான மூலகாரணம் ஆகும்.

1917 மார்ச் 8 ல் ஏற்பட்ட எழுச்சி ரஷ்யாவின் முதற்கட்ட புரட்சி அதே ஆண்டு, அக்டோபர் மாதத்தில் சோசலிசப் புரட்சி வெற்றி பெற்றது. தொழிலாளர்கள் தலைமையில், விவசாயிகளும் பங்கு பெறக் கூடிய ஆட்சி லெனின் தலைமையில் அமைந்தது. லெனின் தலைமையிலான அரசு ஆண் பெண் தொழி லாளர்களுக்கு சம ஊதியம் உள்ளிட்டு, பெண் விடுதலையை உள்ளடக்கமாகக் கொண்ட பல உரிமைகளை வழங்கிடும் சட்டம் இயற்றப்பட்டது. மார்ச் 8 உலக மகளிர் தினத்தின் உள்ளடக்கம் சோசலிசப் புரட்சிக்கான எழுச்சி ஆகும்.

வீட்டு வன்முறை, சமூக கட்டுப்பாட்டுக்கள், இன ஒடுக்குமுறை போன்றவற்றால் நசியுண்டு போன ஈழப்பெண்கள் அடிமை விலங்கை அறுத்தெறிந்து தமிழீழ விடுதலைப்போராடடத்தில் தம்மை இணைத்துக் கொண்டனர்.


பெண்களால் எந்த பெரிய சாவல்களையும் உடல், உள ரீதியா வெற்றி கொள்ள முடியும் என்பதனை விடுதலைப் புலிகளின் மகளிர் அணியினர் சாதித்துக் காட்டினார்கள்.

“என் தங்கைகள் படைநடத்தும் அழகில் நான் தலை நிமிர்ந்து கொள்வேன்.”என தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் கூறியமையே தமிழீழப்பெண்களுக்கான தனி பெருமை.

Leave a comment