மலேசியாவில் கிம் ஜாங் நாமை கொன்றது வடகொரியாவே – அமெரிக்கா குற்றச்சாட்டு

452 0

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-னின் ஒன்று விட்ட சகோதரர் கிம் ஜாங் நாம் ரசாயன ஆயுதத்தால் கொல்லப்பட்டது வடகொரியாவின் செயலே என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்-னின் ஒன்றுவிட்ட சகோதரரான (தந்தையின் சகோதரர் மகன்) கிம் ஜாங் நாம் மலேசிய விமான நிலையத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி அன்று அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக இரு பெண்கள் மற்றும் வட கொரியாவை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரை கொல்வதற்காக உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட ‘VX’ எனப்படும் கொடிய நச்சு ரசாயனம் பயன்படுத்தப்பட்டது பிரேத பரிசோதனையின் மூலம் கண்டு பிடிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட பெண்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு கோலாலம்பூர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதம் மூலம் கூலிப்படையை பயன்படுத்து வடகொரியா கிம் ஜாங் நாமை கொலை செய்ததாக அமெரிக்க உள்துறை அமைச்சகம் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளது.
சர்வதேச விதிமுறைகள் ஒழுங்கு நடவடிக்கைகளை மீறி வடகொரியா தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதம் மற்றும் உயிரியல் ஆயுதங்களை பரிசோதனை செய்து வருவதை அமெரிக்கா கண்டிக்கிறது என அதில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடத்த மற்றும் அணு ஆயுத சோதனைகளை நிறுத்திவைக்க தயார் என தென்கொரிய தூதுக் குழுவிடம் கிம் ஜாங் உன் உறுதியளித்த சில நாட்களிலேயே அமெரிக்கா இந்த குற்றச்சாட்டை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால், அமெரிக்கா உடன் சமாதானமாக போகும் முடிவை கிம் திடீரென மாற்றக்கூடும் என்ற அச்சமும் வெளியாகியுள்ளது.

Leave a comment