டெல்லியில் இருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் வருகிற மார்ச் 22-ம் தேதி முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில் இருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகருக்கு விரைவில் நேரடி விமானச் சேவையை தொடங்க ஏர் இந்தியா நிறுவனம் தீர்மானித்துள்ளது. வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்படும் இந்த விமானம் டெல்லியில் இருந்து டெல் அவிவ் நகரை சென்றடைய சுமார் 8 மணி நேரம் ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளையில், சவுதி அரேபியா நாட்டின் வான் எல்லை வழியாக சென்றால் ஐந்தரை மணி நேரத்தில் டெல் அவிவ் போய் சேர்ந்து விடலாம். ஆனால், இஸ்ரேல் நாட்டுக்கு செல்லும் அல்லது சென்று திரும்பும் எந்த விமானமும் தங்கள் நாட்டு வான் எல்லையில் நுழைய கூடாது என சவுதி அரேபியா தடை விதித்துள்ளது.
இந்நிலையில், டெல்லியில் இருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் தங்கள் நாட்டு வான் எல்லையை பயன்படுத்திகொள்ள சவுதி அரேபியா அனுமதி அளித்துள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நேற்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து இந்த விமான சேவையானது வருகிற மார்ச் 22-ம் தேதி தொடங்கப்படும் என ஏர் இந்தியா நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் 8 மணி நேரத்துக்கு பதிலாக ஐந்தரை மணி நேரத்தில் டெல்லியில் இருந்து டெல் அவிவ் சென்றடையலாம். இதனால் சுமார் இரண்டரை மணி நேரம் மிச்சமாகும்.
இந்த சேவையானது செவ்வாய், வியாழன், ஞாயிறு ஆகிய தினங்களில் இயக்கப்பட உள்ளது. புதுடெல்லியில் இருந்து மாலை 4:50 மணிக்கு புறப்பட்டு 8:25 மணிக்கு (உள்ளூர் நேரப்படி) டெல் அவிவ் சென்றடையும் விமானம், டெல் அவிவ்-இல் இருந்து இரவு 10:15 மணிக்கு (உள்ளூர் நேரப்படி) புறப்பட்டு காலை 9 மணிக்கு புதுடெல்லி வந்தடையும்.