தமிழக பா.ஜ.க. தொண்டர்கள் எந்த வகையிலும் வன்முறை அரசியலில் ஈடுபடக்கூடாது என்று தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறி உள்ளார்.
தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
பா.ஜனதா கட்சி வளர்ச்சி மீது நம்பிக்கை உள்ள கட்சி, வன்முறை அரசியலை ஊக்கப்படுத்தாமல், வளர்ச்சி நல்முறை அரசியலை கொண்டு வருவது தான் நம் கொள்கை. தமிழகம் வளர்ச்சி பாதைக்கு செல்ல வேண்டும், கட்சியை பலப்படுத்தி அதன் மூலம் மக்களுக்கான வளர்ச்சி திட்டங்களை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் எனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறேன்.
சுற்றுப்பயணத்தின்போது அமைப்பு ரீதியாக வாக்குச் சாவடி பொறுப்பாளர்களை சந்திப்பது மட்டுமல்லாமல் அப்பகுதி பொதுமக்களையும் சந்தித்து அந்த பகுதியில் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்கான அவர்களின் கருத்தை கேட்டும், குறித்துக்கொண்டும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நிலையில் தான் பா.ஜ.க.வின் நோக்கமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் உள்ளது.
இதே போல தமிழ்நாட்டில் உணர்ச்சிகரமான, கொந்தளிப்பான, எதிர்மறையான, வளர்ச்சிக்கு பங்கம் விளைவிக்கும் எந்த நடவடிக்கையையும் பா.ஜ.க. ஊக்கப்படுத்தாது.
ஒரு நேர்மறையான, நேர்த்தியான அரசியலை தான் முன்னெடுத்து செல்ல விரும்புகிறோம், கொள்கை ரீதியாக மாறுப்பட்டவர்களை கூட கருத்து ரீதியாக, கொள்கை ரீதியாக மட்டுமே எதிர்கொள்ள வேண்டும் என்பதே நமது கொள்கை.
அரசியல் நாகரிகம் எப்போதுமே காப்பாற்றப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். அதனால் வன்முறை வழி முறைகள் ஏதுவாக இருந்தாலும் தமிழக பா.ஜ.க.வுக்கு ஒப்புதல் கிடையாது.
தமிழக பா.ஜ.க. தொண்டர்கள் எந்த வகையிலும் சிலை தகர்ப்பு போன்ற வன்முறை அரசியலில் ஈடுபடக்கூடாது அத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டால் அவர்கள் மீது கட்சி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும், ஏற்கனவே பெரியார் சிலை சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் முத்துராமன் என்பவரை கட்சியில் இருந்து நீக்கி உள்ளோம். இத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு கட்சி என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் எடுத்து செல்ல வேண்டுமே தவிர கிளர்ச்சிப் பாதையில் எடுத்து செல்ல வேண்டாம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.