21ம் நூற்றாண்டின் மனித நேயம் மரணித்துவிட்ட கொடும் போரும் சிரிய மக்களின் அவலமும் – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை –

369 0

வல்லாதிக்க சக்திகளின் பிடிக்குள் சிக்குண்டு இனப்படுகொலைக்கு உள்ளாகி வரும் அப்பாவி சிரிய மக்களைக் காப்பாற்ற சர்வதேசம் தாமதிக்காது முன்வர வேண்டும். அங்கு நடைபெறும் மூர்க்கத்தனமான தாக்குதல்களால் அழித்தொழிக்கப்படும் அம்மக்களை மனிதாபிமானத்துடன் நோக்கி அங்கு அமைதியைப் பேண ஆவன செய்யவேண்டும் என்ற வேண்டுகோளை அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை சார்பாகச் சர்வதேசத்திடம் முன்வைப்பதோடு எமது கண்டனத்தையும் தெரிவிக்கின்றோம்.

இன்றுவரை அண்ணளவாக 500,000 அப்பாவி மக்கள் இப்போரில் உயிரிழந்துள்ளனர். சிறுவர்கள், பெண்கள், வயோதிபர்கள் என்ற வித்தியாசம் இன்றி பல இலட்சம் மக்கள் கொன்று குவிக்கப்படுகின்றனர். பல்லாயிரக்கணக்கானோர் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டும், சிறைகளில் அடைக்கப்பட்டும் உள்ளனர். எல்லாவற்றிற்கும் மேலாக மிகக்கொடுமையான சம்பவங்கள் என்று பார்த்தால் பச்சைப்பாலகர்கள் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலைசெய்யப்படுவதாகும். ஈழத்தமிழர்களுக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கம் இனப்படுகொலைக்கு நிகராக இந்த 21ம் நூற்றாண்டில் மனித நேயம் மீண்டும் மரணித்துவிட்ட கொடும் போராகவே சிரியப்போர் கணிக்கப்படுகின்றது.

தீர்வின்றி நீண்டு செல்லும் சிரியாவின் யுத்ததை நிரந்தரமாக நிறுத்துவதற்கு வக்கற்ற நிலையில் உள்ளது ஐக்கிய நாடுகள் சபை. கி.மு மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்பு இருந்தே, நீண்ட நெடுங்கால வரலாறைக் கொண்ட சிரியா இன்று வல்லாதிக்க சக்திகளின் போட்டிக்குள்ளும் சில நாடுகளின் உலக சர்வசக்திக் கனவிற்குள்ளும் அகப்பட்டு சின்னாபின்னாமாகிக் கொண்டு இருக்கின்றது.

ஒரு சில வல்லாதிக்க நாடுகளின் அதிகாரப் போட்டிக்குள் நரபலி எடுக்கப்படும் சிரிய மக்களுக்காக, இனப்படுகொலைக்கு உள்ளாகிய இனம் என்ற வகையில் உங்கள் வலியை நாங்கள் உணர்கின்றோம், உங்களுக்காக நாங்களும் உடனடிப் போர் நிறுத்தம் வேண்டும் எனச் சர்வதேச சமுகத்திடம் வேண்டிநிற்கின்றோம்.

ஐ.நா பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்புடன் தற்பொழுது நிறைவேற்றப்பட்டுள்ள தற்காலிக போர் நிறுத்தம் ஒரு அமைதியைச் சூழலை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் ஈழத்தமிழராகிய நாமும் உங்கள் வலிசுமந்து காத்திருக்கின்றோம். ஐநாவின் இத்தீர்மானத்தினை அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை வரவேற்று, அத்துடன் போரின் பங்காளர்களாக இருக்கும் அனைத்து நேர்முக மற்றும் மறைமுக சக்திகள் தீர்மானத்தை மதித்து முறையாகக் கடைப்பிடிப்பதோடு நின்றுவிடாது சிரிய மக்களை நிம்மதியாகவும் நிரந்தர சமாதானத்துடனும் வாழவிடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறோம்.

– அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை –

Leave a comment