ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கார் வெடிகுண்டு மூலம் நடத்திய தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
ஈராக்கில் ஒருசில பகுதிகளை கைப்பற்றியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்கள் ஆதிக்கத்தை விரிவாக்கும் முயற்சியாக தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று இரவு மத்திய பாக்தாத்தில் உள்ள முக்கிய வர்த்தக பகுதியான கராதாவில் வெடிகுண்டு நிரப்பிய காரை வெடிக்கச் செய்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
ஷியா பிரிவினர் அதிகம் வசிக்கும் இப்பகுதியில் உள்ள மருத்துவமனை, கடைகளுக்கு அருகில் உள்ள பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்துச் சிதறியதில் சுமார் 15 கார்கள், கடைகள் சேதம் அடைந்தன. கடைகளில் பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில், 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 28 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஜூலை மாதம் கராதா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 300 பேர் கொல்லப்பட்டனர். அங்கு தற்போது இயல்பு வாழ்க்கை திரும்பிய நிலையில் அமைதியை சீர்குலைக்க மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.