காவிரியில் கர்நாடக மாநில அரசு தண்ணீர் திறந்து விடாததைக் கண்டித்து புதுவை சட்டசபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.தமிழகத்துக்கு நாள்தோறும் 15 ஆயிரம் கனஅடி நீரை கர்நாடக மாநில அரசு திறந்து விட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. புதுச்சேரி மாநிலத்தின் ஒரு பகுதியான காரைக்காலுக்கு காவிரி நடுவர்மன்ற உத்தரவின்படி காவிரியில் நீர் திறந்து விட வேண்டும்.
இந்த பிரச்சினையை இன்று புதுவை சட்டசபையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் எழுப்பினார்கள். அவர்கள் கர்நாடகாவை கண்டிக்கும் வகையில் பதாகைகளை கையில் ஏந்தி இருந்தனர்.
அ.தி.மு.க. உறுப்பினர் அன்பழகன் பேசும் போது, காவிரியில் நீர் திறக்காத கர்நாடக மாநில அரசைக் கண்டித்தும், நீர் திறந்து விட மத்திய அரசை வலியுறுத்தியும் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். புதுவை அரசும் மனு செய்துள்ளது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால உத்தரவை கர்நாடக அரசு செயல்படுத்தவில்லை. எனவே இதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.
இதற்கு பதில் அளித்த முதல்-அமைச்சர் நாராயணசாமி, காவிரி கடை மடைப்பகுதியான காரைக்காலுக்கு 6 டி.எம்.சி. நீரைப் பெற வேண்டும் என்பதில் புதுவை அரசு உறுதியாக உள்ளது. காரைக்கால் விவசாயிகளின் உரிமையை நிலை நாட்டுவோம்.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் அரசு நடந்தாலும் புதுச்சேரி அரசு இதில் உறுதியாக செயல்படும். கேள்வி நேரம் முடிந்த பின் நாங்கள் இப்பிரச்சினைக்கு பதில் தருவோம் என்றார்.
இதில் திருப்தி அடையாத அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் காவிரியில் தண்ணீர் திறக்காத கர்நாடக அரசைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.