பாளையில் பாலத்தில் கார் மோதி 3 பேர் பலி

355 0

201609061348554018_3-killed-in-car-crash-on-bridge_SECVPFபாளையில் புதுமாப்பிள்ளை கண்முன்னே பாலத்தில் கார் மோதி தந்தை-சகோதரர் பலியாகினர். விபத்து குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் சாஸ்தா நகரை சேர்ந்தவர் முருகன்(வயது 55). இவர் பக்கத்து ஊரான புத்தேரியில் மீன் வளர்ப்பு பண்ணைகளை நடத்தி வந்தார். இவருக்கு மைக்கேல் ராஜ்(34), லெனின் ஆகிய 2 மகன்கள். இவர்கள் 2 பேரும் தந்தையுடன் சேர்ந்து மீன் வளர்ப்பு பண்ணைகளை மேற்பார்வையிட்டு வந்தனர்.

மைக்கேல் ராஜூக்கு திருமணமாகி லினோ(32) என்ற மனைவியும், கபிரியேல்(4), டேனியல்(2) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் லெனினுக்கு திருமணம் செய்ய விருதுநகரை சேர்ந்த ஒரு பெண்ணை பார்த்து முடிவு செய்து இருந்தனர். இந்த திருமணம் நிச்சயதார்த்த நிகழ்ச்சி விருதுநகரில் நேற்று நடந்தது.

இதற்காக முருகன் நேற்று காலையில் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை ஒரு வேன் மற்றும் 2 கார்களில் விருதுநகருக்கு அழைத்து சென்றார். அங்கு திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் மாலையில் அனைவரும் சொந்த ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

அவர்கள் வந்த ஒரு காரை மைக்கேல் ராஜ் ஓட்டி வந்தார். அந்த காரில் அவருடைய தந்தை முருகன், மாமனாரான சின்னமுட்டத்தை சேர்ந்த கிளைவ்பாஸ்(62), மாமியார் பினோரியா(56), மனைவி லினோ, மகன்கள் கபிரியேல், டேனியல் ஆகிய 6 பேர் உடன் இருந்தனர்.

பாளை கே.டி.சி. நகரை கடந்து, டி.வி.எஸ். நகர் ரெயில்வே மேம்பாலம் வழியாக நாற்கர சாலையில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக சாலையின் வலது பக்க தடுப்பு சுவரில் கார் மோதியது. பின்னர் மோதிய வேகத்தில் அப்படியே திரும்பிய கார் இடது பக்கம் திரும்பிய ரெயில்வே மேம்பாலத்தின் இடது பக்க தடுப்பு சுவரில் மோதி நின்றது. காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. காரில் இருந்த மைக்கேல் ராஜ் உள்ளிட்ட 7 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். லெனின் மற்றும் உறவினர்கள் மற்றொரு கார், வேனில் பின்னால் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் தங்களுக்கு முன்னால் சென்ற கார் விபத்துக்குள்ளாகி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தன் கண்முன்னே தந்தை, சகோதரர் உள்ளிட்ட அனைவரும் உயிருக்கு போராடுவதை அறிந்த லெனின் உள்ளிட்ட அனைவரும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அப்போது அந்த வழியாக தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியனும், அவருடன் பாதுகாப்புக்கு வந்த போலீசாரும் காயம் அடைந்தவர்களை மீட்டு பாளை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மைக்கேல்ராஜ், முருகன், கிளைவ்பாஸ் ஆகிய 3 பேரும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

பலத்த காயம் அடைந்த லினோ, கபிரியேல், டேனியல், பினோரியா ஆகிய 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அந்த வழியே சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.