காவிரி பிரச்சனை தீரும் என்றால் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய தயார்- மைத்ரேயன்

469 0

காவிரி பிரச்சனை தீரும் என்றால் அ.தி.மு.க. எம்.பி.க்கள் அனைவரும் பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக மைத்ரேயன் எம்.பி. கூறியுள்ளார். 

அ.தி.மு.க. எம்.பி.யும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளருமான மைத்ரேயன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர் ராஜினாமா செய்வதால் காவிரி மேலாண்மை வாரியம் அமைந்திடும், அதற்கான நிர்பந்தம் மத்திய அரசுக்கு ஏற்படும் என்றால் எங்கள் கட்சி தலைமை கூறினால் நான் உள்பட அனைத்து உறுப்பினர்களும் ராஜினாமா செய்வோம்.

எம்.பி.க்கள் ராஜினாமா செய்வதால் காவிரி மேலாண்மை வாரியம் அமைந்திட தீர்வு வந்திடுமா? என்ற பெரிய கேள்வி இருக்கிறது. என்னை பொறுத்த வரையில் பாராளுமன்றத்தில் இருந்து மற்ற கட்சிகளுடன் பேசி அவர்களையும் இணைத்து கொண்டு மத்திய அரசுக்கு நிர்பந்தம் தர வேண்டும் என்பது தான் சரியான முறையாக இருக்கும்.

இன்று பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு தொடங்குகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி தெளிவான விளக்கம் அளிக்க நிர்பந்தம் கொடுப்போம்.

வடகிழக்கு மாநிலத்தில் அமைந்த ஆட்சி மாற்றத்தை போல் தமிழகத்திலும் அமையும் என்று தமிழிசை சொல்லி இருக்கிறார். தமிழகத்தில் கடந்த 50 வருட அரசியல் வரலாறு அவருக்கு தெரியாது.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment