ஜனாதிபதியும் பிரதமரும் கடந்த 2015 ஆம் ஆண்டு நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் 10 வீதத்தையாவது எஞ்சிய காலப்பகுதியில் நடைமுறைப்படுத்த முற்படுவார்களாயின் நாடு முகம்கொடுத்துள்ள ஸ்தீரமற்ற நிலை ஓரளவுக்கு நீங்கும் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள அதிகாரப் போட்டி காரணமாகவே நாட்டில் ஸ்தீரமற்ற ஒரு அரசியல் நிலைமை ஏற்பட்டுள்ளது. கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் மக்கள் அளித்த வாக்குகளை மிகச் சரியாக புரிந்துகொண்டு இருவரும் சேவையாற்ற முன்வர வேண்டும்.
தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷாக்கள் பெற்ற வெற்றி என்பது அவர்கள் தவறு செய்தவர்கள் அல்ல என்பது கருத்தல்ல. உள்ளுராட்சி சபைத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணிக்கு அளித்த வாக்குகள் ஊழலுக்கு எதிரானவை. இவற்றை எடுத்துக் கொண்டு ஊழலுடன் தொடர்புபட்ட இரு கட்சிகளுடனும் கூட்டுச் சேர ஜே.வி.பி. ஒரு போதும் உடன்படுவதில்லையெனவும் அவர் கூறினார்.
தனியார் வானொலி ஒன்று இன்று(03) காலை நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து அவரிடம் வினவியதற்கே இவ்வாறு பதிலளித்தார்.